search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் மற்றொரு நட்சத்திர ஓட்டலிலும் கொரோனா பரவியது - 16 ஊழியர்களுக்கு தொற்று

    சென்னையில் உள்ள மற்றொரு நட்சத்திர ஓட்டலிலும் கொரோனா பரவியது. அங்கு பணியில் இருந்த 16 ஊழியர்களுக்கு தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் சென்னை ஐ.ஐ.டி.யில் 150-க்கும் மேற்பட்ட ‘மெஸ்’ ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து இந்த தொற்று பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அங்குள்ள ஊழியர்களில் ஒருவர் பின் ஒருவராக கொரோனா வைரசால் தாக்கப்பட்டனர். இதையடுத்து ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 609 பேருக்கு
    கொரோனா
    பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 85 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    இதில் சிலர் கிண்டி கொரோனா மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அந்த 85 பேரில், பலருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்ததால், அவர்கள் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்களில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    இந்த உத்தரவின் அடிப்படையில் பெரும்பாலான நட்சத்திர ஓட்டல்களில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் பணிபுரிந்த 130 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் 2 நட்சத்திர ஓட்டல்களில் பணியில் இருந்த ஊழியர்களில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த 2 நட்சத்திர ஓட்டல்களில் வரும் 10-ந் தேதி வரை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும் தொடர்ந்து 3 நாட்களுக்கு அங்குள்ள ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் வெளிநாட்டு பயணிகள் தங்குவதால் கொரோனா பரவுகிறதா? அல்லது உணவு பொருட்கள் மூலம் பரவுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×