search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலப்பாளையம் குறிச்சியில் மண்பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்
    X
    மேலப்பாளையம் குறிச்சியில் மண்பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்

    மேலப்பாளையம் குறிச்சியில் பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் மண்பானைகள்

    மேலப்பாளையம் குறிச்சியில் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக மண்பானைகள், விறகு அடுப்புகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    நெல்லை:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் வீட்டின் முற்றத்தில் பொங்கலிட்டு, அனைத்து வகையான காய்கறிகளையும் கொண்டு சாம்பார் தயாரித்து சூரிய பகவானுக்கு வழிபடுவது வழக்கம் ஆகும். அப்போது மஞ்சள் குலை, கரும்பு ஆகியவையும் வீடுகளின் முன்பு அலங்காரமாக கட்டப்படும். இதில் பெரும்பாலானோர் மண்பானையில் பொங்கலிடுவார்கள்.

    இதையொட்டி மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாக மண்பானைகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையில் மேலப்பாளையம் குறிச்சி, மேலச்செவல் உள்பட பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் மண்பானைகளை தயாரித்து காய வைத்து, அதனை சூளையில் வைத்து தீயிட்டு முழுமையாக தயார் படுத்தி விற்பனைக்காக அனுப்பி வருகிறார்கள். மேலும் பொங்கலிடுவதற்கு தேவையான அடுப்புகள், அடுப்பு கட்டிகள் ஆகியவையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து குறிச்சியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் கணேசன் கூறியதாவது:-

    பொங்கல் திருநாளில் பாரம்பரியமாக மண்பானையில் பொங்கலிட அனைவரும் விரும்புவர். இதற்காக 3 வகையான பானைகள் தயாரித்து உள்ளோம். அரை கிலோ அரிசி வேக வைக்கும் வகையிலான பானை ரூ.75, முக்கால் கிலோ அரிசிக்கு உரிய பானை ரூ.100, 1 கிலோ அரிசிக்கு உரிய பானை ரூ.130 வரை விற்கப்படுகிறது. மேலும் அனைத்து காய்கறிகளையும் போட்டு குழம்பு தயாரிக்க உதவும் பானையும் ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் அடுப்பு ரூ.100-க்கு விற்கிறோம்.

    கடந்த 2 மாதமாக இதற்குரிய பணிகளை செய்து வருகிறோம். ஆனால் தொடர் மழை காரணமாக பானைகளை காய வைப்பதிலும், சூளையில் அடுக்கி தயார் செய்வதும் பாதிக்கப்படுகிறது. தற்போது நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக பானைகளை அனுப்பி வருகிறோம்.

    சிலர் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல்படி கொடுக்கும்போது, பச்சரிசி, வெல்லம் ஆகியவற்றை போட்டு கொடுப்பதற்காக வண்ண பானைகள் கேட்கிறார்கள். எனவே அவர்களுக்காக பானையின் வெளிப்புறத்தில் அழகிய வர்ணம் பூசி கொடுக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×