search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கடன் தொல்லையால் விபரீத முடிவு- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

    பெரும்பாவூர் அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    பெரும்பாவூர்:

    எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே உள்ள சேலாமற்றம் பகுதியை சேர்ந்தவர் பிஜூ(வயது 46). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். மேலும் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவருடைய மனைவி அம்பிலி(39). இவர்களுக்கு ஆதித்யா(15) என்ற மகளும், அர்ஜூன்(13) என்ற மகனும் இருந்தனர்.

    இதற்கிடையில் பிஜூ ஏலச்சீட்டு நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவும், வியாபாரம் தொடர்பாகவும் பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வாங்கிய கடனை அவரால் திரும்ப செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பீஜூவின் வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அப்போது அவரது வீட்டுக்கு வழக்கம்போல் பால் வாங்க வருபவர்கள், நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தனர். உடனே பெரும்பாவூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கே.பிஜூமோன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் கதவை உடைத்து, வீட்டுக்குள் சென்றனர். அப்போது ஹாலில் பிஜூ மற்றும் அர்ஜூன் ஆகியோரும், படுக்கை அறையில் அம்பிலி மற்றும் ஆதித்யா ஆகியோரும் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது.

    இதையடுத்து உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த சம்பவம் குறித்து பெரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×