search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 30 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தெரிவித்து உள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு திருட்டு குற்ற வழக்குகளை பொறுத்தவரை 183 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் 138 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, திருட்டு போன சுமார் ரூ.80 லட்சத்து 81 ஆயிரம் மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் உரியவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    திருட்டு, கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள், மதுவிலக்கு குற்றவாளிகள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குற்றவாளிகள் மற்றும் மணல் கடத்தல் குற்றவாளிகள் என மொத்தம் 30 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    அதேபோல் வாகன விபத்துகளை பொறுத்தவரை கடந்த 2019-ம் ஆண்டு 333 சாலை விபத்து இறப்பு வழக்குகளில் 351 நபர்கள் இறந்து உள்ளனர். ஆனால் 2020-ம் ஆண்டு 221 சாலை விபத்து இறப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 237 நபர்கள் இறந்து உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டை காட்டிலும் 33 சதவீதம் இறப்பு குறைந்து உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு 1,492 சிறு சாலை விபத்துகள் ஏற்பட்டு 2,060 நபர்கள் காயமடைந்து உள்ளனர். ஆனால், 2020-ம் ஆண்டு 1,248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1460 நபர்கள் காயமடைந்துள்ளனர். 2019-ம் ஆண்டை காட்டிலும் 2020-ம் ஆண்டு வாகன விபத்தில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் குறைந்து உள்ளது.

    வாகன விபத்தை குறைக்க சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 9,624 நபர்களின் வாகன ஓட்டுனர் உரிமங்கள் போக்குவரத்துத்துறை உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு 3,52,230 மோட்டார் வாகன விதிமீறல் சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராத தொகையாக ரூ.3 கோடியே 65 லட்சம் அபராதமாக பெறப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

    சிறப்பு மற்றும் உள்ளுர் சட்டங்களின்படி கஞ்சா விற்பனையில் 140 வழக்குகளும், சூதாட்டத்தில் 200 வழக்குகளும், மதுவிலக்கு குற்றங்களில் 3,869 வழக்குகளும், மணல் திருட்டுகளில் 198 வழக்குகளும், லாட்டரி குற்ற வழக்குகளில் 338 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று நாமக்கல் மாவட்டத்தில் பரவாமல் தடுக்கும் நோக்கில் முகசுகவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், பொது இடங்களில் எச்சில் துப்பியும் மற்றும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீதும் 14,550 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 ஆயிரத்து 396 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் மற்றும் ரூ.54 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கான உதவி மையங்கள் தொடங்கப்பட்டு அவர்கள் காவல் நிலையங்களுக்கு வர இயலாத சூழ்நிலையில் செல்போன் மூலம் புகாரை தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அந்த வகையில் 1,117 புகார்கள் பெறப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×