search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின் -  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
    X
    திமுக தலைவர் முக ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

    ஆங்கில புத்தாண்டு- மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

    ஆங்கில புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    நாளை புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    2021-ம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் இன்பத்தையும், மகிழ்ச்சியையும், சுகத்தையும் தரும் ஆண்டாக அமைய வேண்டும். இயற்கை பேரிடர்கள் இல்லாத ஆண்டாகவும், கொரோனா எனும் கொடிய நோய் முற்றிலும் ஒழிந்து இயற்கை வளம் மிகும் ஆண்டாக அனைவருக்கும் அமைதி தரும் ஆண்டாகவும் இந்த ஆண்டு அமைய வேண்டும்.

    புத்தாண்டில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் எனது இனிய “ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்”.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்:-

    கடந்த கால இருள் நீங்கும்; கதிரொளி பரவும்; மக்களின் கவலைகளைத் துடைத்திடவல்ல, காக்கும் கரங்களைக் கொண்ட நல்லாட்சி தமிழகத்தில் மலரும்; தமிழ் மக்களுக்கு விடியல் தரும் வாழ்வு புலரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டை உளமார வரவேற்று உவகை கொள்கிறேன்.

    இருளை விரட்டும் உதய சூரியன் ஒளியாக, நெருக்கடி மிகுந்த நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்திலிருந்து உலகத்தாரும் தமிழக மக்களும் வேகமாக மீண்டு வரும் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி வைக்கும் 2021 ஆங்கிலப் புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புத்தாண்டைத் தொடர்ந்து தை முதல் நாளாம் தமிழர் திருநாளாம் நம் பண்பாட்டை எடுத்துரைக்கும் தமிழ்ப் புத்தாண்டாம் பொங்கல் நன்னாள் வருகிறது. மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்குகிற காலம் விரைந்து வருவதை எடுத்துரைக்கும் வகையில், வழக்கம் போலத் தி.மு.க.வினர் அவரவர் பகுதிகளில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் ‘சமத்துவப் பொங்கல்’ விழாவினை, தமிழ்ப் பண்பாடு தவழ்ந்திடக் கொண்டாடிடவும், குதூகலம் கொண்டிடவும் வாழ்த்துகிறேன்!

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    கடந்த ஆண்டு இந்திய மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். கொரோனா பரவல் காரணமாக பாதிப்புகளும், மனித உயிரிழப்புகளும் மிகுந்த வேதனைகளை உண்டாக்கியது. இதனால் மக்களிடையே அச்சமும், பீதியும் பெருகியது.

    வருகிற புத்தாண்டில் தமிழகத்தில் அரசியல் மாற்றமும், நல்லாட்சி மலர்ந்திடவும், தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    2021ஆம் ஆண்டு இருளுக்குப் பிறகு வரும் ஒளி; கோடைக்குப் பிறகு வரும் வசந்தகாலம். பாலையை கடந்த பிறகு வரும் சோலை. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு இனிப்பாக அமையும். மகிழ்ச்சி பெருகும். அமைதியும், நிம்மதியும் அனைவருக்கும் கிடைக்கும். சமூகநீதி தழைக்கும் என்று கூறி, அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

    2021-ம் ஆண்டு மதவெறி, சாதிவெறி சக்திகளை அதிகாரத்தில் இருந்து அகற்றும் போராட்டத்தை மேலும் வலிமைப்படுத்தும், மாநில அதிகாரத்தில் தொடரும் சுயநலக் கும்பலை வெளியேற்றும், மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் மாபெரும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு 2021ம் வருகின்றது. அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    2021 ஆண்டு அனைவரது வாழ்விலும் புதிய விடியலை கொண்டுவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மத்திய, மாநில அரசுகள் கொண்டுவரும் வளர்ச்சி திட்டங்களுக்கு துணை நின்று எதிர்வரும் ஆண்டை திட்டமிட்ட ஆண்டாக, மகிழ்ச்சியான ஆண்டாக மாற்றி காட்டுவோம். அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

    ஒவ்வொருவருக்கும் வளர்ச்சியையும் உத்வேகத்தையும் தருவதற்குமான தீர்ப்பை புத்தாண்டில் எழுதுவதற்கு தமிழக மக்கள் தயாராகி வருகிறார்கள். எல்லா வகையிலும் சிறந்த ஆண்டாகவும் உற்சாகம் தருகிற ஆண்டாகவும் 2021 திகழட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    கொரோனா எனும் வைரஸ் பரவல் காரணமாக பெரும் சவால்களுடன் கூடிய புதிய அனுபவங்களை தந்து வரலாற்றில் பதிவு செய்கின்ற முக்கிய ஆண்டாக அமைந்த 2020-ம் ஆண்டை வெற்றிகரமாக கடந்து, சட்டசபை தேர்தலுடன் வரவுள்ள 2021 புத்தாண்டை வரவேற்க இருக்கிறோம். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி.:-

    ஜாதி மத பேதமின்றி மகிழ்வுடன் மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்திடவும் அருள்புரிய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து புத்தாண்டு நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    பிறக்கிற புத்தாண்டில், கடந்த ஆண்டில் நடந்து முடிந்த கசப்பான சம்வங்களும், அனுபவங்களும் மறைந்து மக்கள் அனைவரும் நிம்மதியாகவும், நோயிலிருந்து முழுமையாகவும் விடுபட வேண்டும். வருகிற புத்தாண்டு அனைவருக்கும் வளம் பெருகி ஒற்றுமையாக வாழ்ந்திட வகை செய்யும் ஆண்டாக அமைந்திட வாழ்த்துகிறேன்.

    2021-ம் ஆண்டில் மக்கள் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையோடு இருக்க வேண்டும். இவ்வாண்டு உலகின் முதன்மையான வல்லரசு நாடு இந்தியா என்ற தகுதியை நாம் அடைய அயராது பாடுபட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் இனி புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    சாத்தியங்களுக்கும், நிஜத்திற்கும் இடையே கடக்க வேண்டிய தூரம் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது. வரும் வருடத்தில், நம்மை நாமே மேலான மனிதர்களாக்கிக் கொண்டு அதன் மூலம் இன்னும் மேன்மையான உலகை உருவாக்குவதற்கான துணிவும், உறுதியும், விழிப்புணர்வும், நம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

    இயேசு அழைக்கிறார் நிறுவனர் பால் தினகரன்:-

    கடந்த ஆண்டில் நாம் கடந்து வந்த கண்ணீரின் பாதை, சர்வதேச நோய் பரவல் நிமித்தம் தந்த இழப்புகள் எல்லாம் முற்றுப்பெற்று மீண்டும் இரண்டு மடங்கான பலனை அனுபவிக்கும் ஆண்டாக 2021 விளங்கும்படி வாழ்த்துகிறேன். அத்துடன், யாவரும் சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து செய்வதெல்லாவற்றிலும் வெற்றி காணும்படி எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்.

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் விருகை வி.என்.கண்ணன்:-

    ரியல் எஸ்டேட் தொழில் புரியும் என் உடன் பிறவா அனைத்து தோழர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் இனி வரும் 2021 புத்தாண்டில் அனைத்து தொழிலுமே புத்துயிர் பெற்று பட்டொளி வீசி பறக்கவேண்டு என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    பாரிவேந்தர் எம்.பி., தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி. விஜயகுமார், தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசம், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி, சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பனங்காட்டுப்படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், பசும்பொன் மக்கள் கழக தலைவர் இசக்கிமுத்து, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, இந்திய தேசிய லீக் பொருளாளர் ஜகிருதீன்அகமது, தேசியவாத காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் கோல்டன் அபு பக்கர்,

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து, கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் ஆ.முத்துக்குமார், தமிழ்நாடு லேக் தந்த்ரிக் ஜனதா தள தலைவர் ராஜகோபால், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் சக்தி ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×