search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேஜஸ் ரெயில்
    X
    தேஜஸ் ரெயில்

    மதுரை-சென்னை தேஜஸ் சிறப்பு ரெயிலை நிறுத்தக்கூடாது- ரெயில்வே அமைச்சருக்கு எம்.பி.கடிதம்

    மதுரை-சென்னை தேஜஸ் ரெயிலை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய ரெயில்வே அமைச்சருக்கு எம்.பி.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
    மதுரை:

    மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட அதிநவீன சொகுசு தேஜஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கொரோனா ஊரடங்கால் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வருகிற 4-ந் தேதி முதல் இந்த ரெயில் நிறுத்தப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பயணிகளின் வரத்து குறைவுக்கு வசதிகள் மற்றும் நிறுத்தங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது.

    அவற்றை கருத்தில் கொள்ளாமல் வருமானத்தை மட்டும் கணக்கில் கொண்டு ரெயிலை நிறுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, மதுரை-சென்னை தேஜஸ் ரெயிலை நிறுத்தும் முடிவை கைவிட வலியுறுத்தி மத்திய ரெயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் இருந்து சென்னைக்கு இருமார்க்கங்களிலும் தேஜஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணிகள் வரத்து குறைவால் வருகிற 4-ந் தேதி முதல் நிறுத்தப்போவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. ரெயில்வே என்பது மக்களுக்கு சேவை செய்யும் பொதுத்துறை நிறுவனமாகும்.

    அந்த துறை லாபத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு செயல்படுவது கண்டனத்துக்குரியது. தற்போது கொரோனா தொற்று அச்சம் காரணமாக பயணிகள் அரசின் அறிவுறுத்தலின்படி, தங்களது பயணத்தை சுருக்கியுள்ளனர். மேலும், அனைத்து ரெயில்களும் இயக்கப்படுவதில்லை. ரெயில்களில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் பயணம் செய்வது என்பது தொற்றுநோய் பரவலுக்கு வழிவகுக்கும்.

    மேலும், முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை கொண்ட ரெயில் என்பதால் பயணிகளுக்கு கொரோனா அச்சம் அதிகளவு உள்ளது. ஆனால், அரசின் கொள்கைகளுக்கு விரோதமாக அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் இருக்க வேண்டும் என ரெயிலை நிறுத்துவது ஏற்புடையதாக இல்லை.

    இந்த ரெயிலுக்கான கட்டணமும் அதிகமாகும். வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.685 கட்டணம் வசூலிக்கும் போது, தேஜஸ் ரெயிலில் ரூ.920 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனம் தனியாரைப்போல, லாபம் வந்தால் மட்டுமே இயக்குவது என்ற கோட்பாட்டை கடைபிடிப்பது தவறாகும். மதுரை மட்டுமின்றி, சென்னை-கோவை, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்ட சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இதே காரணத்துக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, மக்களின் நலன்கருதி, தேஜஸ் மற்றும் சதாப்தி ரெயில்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×