search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காணொலிக்காட்சி மூலமாக நடந்த ‘டிஜிட்டல் இந்தியா-2020’ விருதுகள் வழங்கும் விழா.
    X
    காணொலிக்காட்சி மூலமாக நடந்த ‘டிஜிட்டல் இந்தியா-2020’ விருதுகள் வழங்கும் விழா.

    டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்- தமிழக அரசுக்கு விருது

    டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற பிரிவில் தமிழக அரசுக்கு ‘டிஜிட்டல் இந்தியா-2020’ தங்க விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    டிஜிட்டல் இந்தியா விருதுகள், புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை முன்னிறுத்தி அவற்றை அனைத்து அரசாங்க நிறுவனங்களும் பின்பற்றுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்திய தேசிய இணையத்தில் நிறுவப்பட்டுள்ளன. சுகாதாரம், தொழிலாளர், நிதி, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் பொருட்டு, விரிவான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உபயோகிப்பதில் முன்னோடி முயற்சிகளைக் கொண்டிருக்கும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தினை, இவ்விருதுகள் கவுரவிக்கின்றன.

    நம்பிக்கை இணையம், செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல், பல்பொருள் இணையம், இயற்கை மொழி செயலாக்கம், குரல் பயணர் இடைமுகம், பெரிய தரவு மற்றும் பகுப்பாய்வு, மெய்நிகர் உண்மை போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

    இந்த ஆண்டு நமது மாநிலம் (தமிழ்நாடு) ‘டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்’ என்ற பிரிவில் ‘டிஜிட்டல் இந்தியா 2020 தங்க விருது’ பெற்றுள்ளது. இந்த விருது 30-ந்தேதி (நேற்று) நடைபெற்ற ‘டிஜிட்டல் இந்தியா -2020 ’விருதுகள் காணொலி மூலம் நடந்த விழாவில், ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கோவில் மேலாண்மை திட்டம் குறித்த மென்பொருள் முன்மாதிரியான தயாரிப்பு என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துக்கு ‘டிஜிட்டல் இந்தியா-2020 வெள்ளி விருது’ வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் இந்த விருதை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.

    இவ்விழாவில் மத்திய தொலைத்தொடர்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் சட்டம், மற்றும் நீதித் துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத், மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் ஷானே, டெல்லி தேசிய தகவலியல் மையத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் நீட்டா வர்மா, தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தகவல் தொழில்நுட்பவியல் துறை மற்றும் தமிழ்நாடு தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப இயக்குனர்கள் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன், ஜே.அருண்குமார், டி.ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×