search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி
    X
    டிஎன்பிஎஸ்சி

    தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகள் என்ன?- டிஎன்பிஎஸ்சி வெளியீடு

    போட்டி தேர்வுகளை எழுதும் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய அறிவுரைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    * போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் இதற்கு முன்பு தேர்வு தொடங்கும் வரை அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டு இருக்கிறது. காலை 9.15 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் யாரும் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    * விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை உடைய பந்துமுனை பேனாவை மட்டுமே பயன்படுத்தவேண்டும். பென்சில் மற்றும் ஏனைய நிற மை பேனாக்களை பயன்படுத்தக்கூடாது.

    * விடைத்தாளில் உரிய இடங்களில் கையொப்பமிட்டு இடது கை பெருவிரல் ரேகையினை பதிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது விடைத்தாளில் மற்ற இடங்களில் மை படாமலும் மற்றும் விடைத்தாள் எவ்வகையிலும் சேதம் அடையாமலும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்குள் ஏதேனும் ஒரு கேள்விகளுக்கு விடைதெரியவில்லை என்றால் விடைத்தாளில் அதற்கென்று ஒரு பிரிவு (இ ஆப்ஷன்) கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்யவேண்டும்.

    * விடைத்தாளில் ஏ, பி, சி, டி மற்றும் இ என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டன என்பதை கணக்கிட்டு அதன் எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்ப வேண்டும். இந்த எண்ணிக்கையில் ஏதும் தவறு இருந்தால் தேர்வர் பெறும் மதிப்பெண்களில் இருந்து 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இதனை கவனத்தில் கொண்டு பிழையில்லாமல் சரியாக எழுதி கருமையாக்கப்பட்டுள்ளதா? என உறுதிசெய்து கொள்ளவேண்டும். இதற்காக ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு நேரம் முடிந்த பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.

    மேற்கூறிய அம்சங்கள் தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்வித தவறுகளும் நிகழாமல் தவிர்ப்பதற்காகவும் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×