search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் பாரில் மதுப்பிரியர் ஒருவருக்கு கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி வழங்கப்பட்ட காட்சி.
    X
    டாஸ்மாக் பாரில் மதுப்பிரியர் ஒருவருக்கு கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி வழங்கப்பட்ட காட்சி.

    கோவையில் 257 டாஸ்மாக் மதுபார்கள் திறப்பு- மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி

    கோவையில் 9 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் 257 டாஸ்மாக் மதுபார்கள் திறக்கப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கோவை:

    கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் டாஸ்மாக் மதுபார்கள் மூடப்பட்டன. கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோதிலும், அதனுடன் இணைந்த பார்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மது வாங்கி செல்லும் மதுப்பிரியர்கள் சாலையோரங்களில் அமர்ந்து மது அருந்தும் நிலை ஏற்பட்டது.

    இதனிடையே கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் 9 மாதங்களுக்கு பிறகு டாஸ்மார் பார்கள் நேற்று மதியம் 12 மணி முதல் திறக்கப்பட்டன. முன்னதாக கொரோனா பீதி காரணமாக டாஸ்மாக் பார்களில் மஞ்சள் கலந்த தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    மேலும் இருக்கைகள், மேசைகள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. இருக்கைகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் மொத்தம் 257 டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் மதுப்பிரியர்களுக்கு கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஊழியர்கள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

    பார்களில் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி வழிகள் அமைக்க வலியுறுத்தி உள்ளோம். பார்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை டாஸ்மாக் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வார்கள். ஆய்வின் போது பாதுகாப்பு வழிமுறைகைள கடைபிடிக்காமல் இருந்தால் பார்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். டாஸ்மாக் மதுபார்கள் 9 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு உற்சாகத்துடன் அமர்ந்து மது அருந்தினர்.
    Next Story
    ×