search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கரன்சி
    X
    இந்திய கரன்சி

    குமரியில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற வீடு வீடாக டோக்கன் வினியோகம்

    குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 பணம் பெற வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று நடந்தது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 5½ லட்சம் ரே‌‌ஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களில் 5 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகள் அனைத்துக்கும் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்பு பொருட்களுடன் ரூ.1000 வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த பொருட்கள் மற்றும் பணம் வருகிற 4-ந் தேதி முதல் ரே‌‌ஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது. 4-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் காலையில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் பொங்கல் தொகுப்புகள் மற்றும் பணம் வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தப்பணி வருகிற 11-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. விடுபட்டவர்கள் 13-ந் தேதி ரே‌‌ஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரே‌‌ஷன் கடை ஊழியர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாகச் சென்று டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். ரே‌‌ஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்யும்போதும் மக்கள் டோக்கன்களை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் சில கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க வந்தவர்களுடன் வரிசையில் நின்று டோக்கன் வாங்கிச் சென்றதையும் காண முடிந்தது.

    வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணியை மாவட்ட வழங்கல் அதிகாரி சொர்ணராஜ் நேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது முறையாக அனைவருக்கும் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டுள்ளதா? கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வினியோகம் செய்யப்பட்டதா? என்பதை மக்களிடமும், கடை ஊழியர்களிடமும் கேட்டறிந்தார்.

    சில ரே‌‌ஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கும்போது நெட்வொர்க் சரியாக இல்லாமல் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதுபோல் பொங்கல் பொருட்கள் வழங்கும்போதும் நெட்வொர்க் பிரச்சினை ஏற்பட்டால் நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு பொருட்கள் வழங்குவது என்பது இயலாமல் போய்விடும். எனவே பொங்கல் பொருட்களை பயோமெட்ரிக் முறையில் இல்லாமல் பழைய முறையில் வினியோகம் செய்தால் எளிதாக இருக்கும் என்றனர்.
    Next Story
    ×