search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    தஞ்சையில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 11 பவுன் நகைகள் கொள்ளை

    தஞ்சையில், முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 11 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிப்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார்(வயது 42). முன்னாள் ராணுவ வீரர். இவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கும்பகோணத்தில் உள்ள டாக்டரிடம் காண்பிக்க முடிவு செய்தார். அதன்படி வீட்டை பூட்டிவிட்டு மனைவி, மகனுடன் செல்வக்குமார் கும்பகோணத்திற்கு சென்றார்.

    நேற்று முன்தினம் செல்வக்குமார் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்து கிடந்ததுடன் அதில் இருந்த பொருட்கள், துணிமணிகள் எல்லாம் சிதறி கிடந்தன.

    பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகை, மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடத்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டின் கதவு, பீரோ, சுவர்களில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

    இது குறித்து செல்வக்குமார் அளித்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைபோன நகை மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என தெரிகிறது.
    Next Story
    ×