
2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அ.தி.மு.க. சார்பில் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் திட்டக்குடியில் நடைபெற்றது.
இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கே.பி கந்தசாமி, வாகை.இளங்கோவன், பாண்டியன், ராஜேந்திரன், பொன்னேரி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நீதிமன்னன் வரவேற்றார்.
அ.தி.மு.க.வின் மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில் நிர்வாகிகள், தொண்டர்கள் என்று அனைவரும் கருத்து வேறுபாடு ஏதுமின்றி ஒற்றுமையாக செயல்பட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். இந்த நோக்கத்தோடு அனைவரும் தேர்தல் பணியை செம்மையாக செய்திட வேண்டும்.
ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க. அழிந்துவிட்டதாக பலர் நினைத்தனர். ஆனால் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு நல்ல ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மக்களிடம் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். மக்களுக்கு தெரியும் யார் நல்லவர்கள் என்று, தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்ற எண்ணத்தில் அனைவரும் எந்த பாகுபாடுமின்றி தேர்தல் பணியில் ஈடுபடவேண்டும். மேலும் ஒவ்வொரு கிளைகளிலும் பூத் கமிட்டி அமைத்து வாக்கு வங்கியை அதிகப்படுத்த வேண்டும். 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். எனவே நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இந்த தேர்தலை எதிர்கொண்டு எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்க பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன், கலைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமு, பெரியசாமி, ஒன்றிய மாணவரணி செயலாளர் எழிலரசன், ஒன்றிய கவுன்சிலர் பத்மாவதி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் முத்தமிழ்ச் செல்வன், கூட்டுறவு வங்கி வீட்டு வசதி தலைவர் மதியழகன், வெள்ளையம்மாள் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு வங்கித் தலைவர் முல்லைநாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.