search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.அழகிரி
    X
    மு.க.அழகிரி

    திமுக கூட்டணியில் வைகோவே இருக்கும்போது மு.க.அழகிரியை சேர்க்க மறுப்பதா?- ஆதரவாளர் கருத்து

    தி.மு.க.வுக்கு பக்கப்பலமாக இருந்து பல்வேறு வெற்றியை தேடி தந்த மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    மதுரை:

    மதுரையில் 3-ந்தேதி ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மு.க.அழகிரி ஆதரவாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். இதுகுறித்து அவரது நெருங்கிய ஆதரவாளரும், முன்னாள் மண்டல தலைவருமான இசக்கிமுத்து கூறியதாவது:-

    தி.மு.க. இயக்கத்திற்காக அயராது பாடுபட்டவர் அண்ணன் மு.க.அழகிரி. கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெறும் 98 இடங்களை பிடித்தது. ஆனால் மு.க.அழகிரியின் சாதூர்யத்தால் தென்மாவட்டங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 9 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது. இதன் மூலம் மைனாரிட்டி அரசு என்று விமர்சித்த அ.தி.மு.க.வினரின் வாயை அடைத்தார் மு.க.அழகிரி.

    தி.மு.க.விற்கு சோதனைகள் வந்தபோதெல்லாம் அவரது உழைப்பு எளிதில் மறக்க முடியாதது.

    கடந்த 2016 தேர்தலில் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார் வைகோ. அறிவாலயத்தை கைப்பற்றுவேன் என்றதோடு, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தவர் அவர்.

    தி.மு.க.வால் வளர்க்கப்பட்ட வைகோ கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்டார். ஆனால் அவர் இன்றைக்கு தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார்.

    எனவே தி.மு.க.வுக்கு பக்கப்பலமாக இருந்து பல்வேறு வெற்றியை தேடி தந்த அண்ணன் மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்பது தான் என்போன்ற தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது.

    தி.மு.க.வில் உள்ள தலைமைக்கழக நிர்வாகிகளும் இதையே விரும்புகின்றனர். ஆனால் சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

    வருகிற 3-ந்தேதி மதுரையில் ஆதரவாளர்கள் கூடி அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம். இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் பங்கேற்கின்றனர்.

    வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்தும் அண்ணனிடம் கோரிக்கை வைக்கிறோம். வருகிற ஜனவரி 30-ந்தேதி அவருக்கு பிறந்தநாள் வருகிறது. அதற்குள் தி.மு.க. தலைமை முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அண்ணன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்பட்டு செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×