search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    வைகை அணையில் மீன்பிடிக்க ஒரு மாதம் தடை- மீன்வளத்துறை அதிகாரி தகவல்

    வைகை அணையில் ஒரு மாதம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. மீன்வளத்துறையில் பதிவு செய்துள்ள சுமார் 140 மீனவர்கள் இந்த மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அணையில் பிடிக்கும் மீன்களில் சரிபாதி பங்கு அரசுக்கு மீனவர்கள் கொடுக்க வேண்டும். ஒருநாளைக்கு சுமார் 200 முதல் 300 கிலோ வரையில் வைகை அணையில் மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தது. வைகை அணையில் பிடிக்கப்படும் ஜிலேபி மீன்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்வார்கள்.

    இந்தநிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து 60 அடியிலேயே உள்ளது. நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதால் தேங்கியிருக்கும் தண்ணீரின் பரப்பளவு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மீனவர்கள் விரிக்கும் வலையில் மீன்கள் சிக்கவில்லை. கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீன்கள் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பி வந்தனர். இதனையடுத்து மீன்கள் வலையில் சிக்காததால் மீன்பிடிப்பதை அவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதற்கிடையே மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வைகை அணையின் நீர்மட்டம் 45 அடிக்கும் கீழே சரிந்தால் மட்டுமே மீன்கள் அதிக அளவில் பிடிபடும். எனவே நீர்மட்டம் சரியும் வரையில் மீன்பிடி தொழிலை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வைகை அணையில் ஒரு மாதம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் குறைந்ததும் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்படும். அதே நேரத்தில் வைகை அணையை சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டுத்தனமாக மீன்கள் பிடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×