search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெற்கு வீரவநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் மனு கொடுக்க வந்தபோது எடுத்த படம்
    X
    தெற்கு வீரவநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் மனு கொடுக்க வந்தபோது எடுத்த படம்

    ஆடு, மாடு கொட்டகை வழங்கியதில் முறைகேடு - நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

    ஆடு. மாடு கொட்டகை வழங்கியதில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். தற்போது கொரோனா தொற்று காரணமாக கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறாமல் அங்கு வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றனர்.

    மேலும் கலெக்டர் விஷ்ணு, பொதுமக்களிடம் காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். காணொலி காட்சி மூலம் கோரிக்கையை சொல்ல இயலாத பொதுமக்கள் அங்குள்ள புகார் பெட்டியில் மனுக்களை போடுகின்றனர்.

    நெல்லை அருகே உள்ள கம்மாளன்குளம் கிராம மக்கள், முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் பாரதிராஜா, வக்கீல் பிரபு ஜீவன், ஊர் பிரமுகர்கள் சோலைராஜ், சுதாகர் வெள்ளைபாண்டியன் மற்றும் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்., தங்கள் ஊரில் ஆடு, மாடு கொட்டைகள் வழங்கியதில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், “ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கம்மாளங்குளம் கிராமத்தில் ஆடு, மாடு இல்லாதவர்களுக்கு கூட ஆட்டு கொட்டகை, மாட்டுக்கொட்டகை வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கும் ஆடு, மாடு கொட்டகை வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக ஆடு, மாடு வளர்த்து வரும் நபர்களுக்கு ஆடு, மாடு கொட்டகைகள் வழங்கப்படவில்லை. இந்த ஆடு மாடு கொட்டகைகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இலவசமாக வீடுகளில் கழிப்பறை கட்டுவதற்கு பயனாளிகளுக்கு பணம் வழங்குவதிலும் முறைகேடு நடந்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

    கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமமக்கள் கொடுத்த மனுவில், “தங்கள் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும். கூடங்குளம் அணு உலையை சுற்றி 5 கிலோ மீட்டர் அளவிற்கு பெரிய அளவில் வெடிவைத்து கல்குவாரி உடைக்கக் கூடாது என்ற சட்டத்தையும், குடியிருப்புகளுக்கு அருகில் கல்குவாரி நடத்தக்கூடாது என்ற விதியையும் மீறி அங்கு அளவுக்கு அதிகமான ஆழத்தில் கல் உடைத்து வருகிறார்கள். இந்த கல்குவாரிகளால் வீடுகளுக்கு சேதம் ஏற்படுகிறது. எனவே இதனை தடை செய்ய வேண்டும்”் என்று கூறியுள்ளனர்.

    சேரன்மாதேவி அருகே உள்ள தெற்கு வீரவநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் “தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவில் தற்போது வீடு கட்ட இருப்பதால் அந்த இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்யக்கூடாது. மீண்டும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும”் என்று கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×