search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    குதிரை பந்தயத்தையும், ஆன்லைன் ரம்மி விளையாட்டையும் ஒன்றாக கருத முடியாது- ஐகோர்ட் கருத்து

    குதிரை பந்தயத்தையும், ஆன்லைன் ரம்மி விளையாட்டையும் ஒன்றாக கருத முடியாது என்று சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
    சென்னை:

    ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்த தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து, அந்த விளையாட்டை நடத்தி வந்த தனியார் நிறுவனங்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

    இந்த வழக்குகளுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து சில நிறுவனங்கள் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘‘ஆன்லைனில் ரம்மி விளையாடுவது பாதுகாப்பானது. இதில் முறைகேடோ, மோசடியோ கிடையாது. சூதாட்ட விளையாட்டு விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு குதிரைப்பந்தய வழக்குகள் முன்னுதாரணமாக உள்ளன. எனவே, இந்த வழக்குகளில் விசாரணை முடியும்வரை அவசர சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என்று வாதிட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பெற்றோரின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பிள்ளைகள் பெரும் தொகையை இழக்கின்றன. இதில் சில அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. இதனால், ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து, குதிரை பந்தயத்தில் கலந்து கொள்வதும், உட்கார்ந்த இடத்திலேயே ரம்மி விளையாடுவதையும் ஒன்றாக கருதமுடியாது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கி, விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 18-ந்தேதி தள்ளிவைத்தனர்.
    Next Story
    ×