
உசிலம்பட்டி அருகே நடுமுதலைக்குளம் பகுதியில் உள்ள மலையில் சுமார் 2,300 ஆண்டுகள் பழமையான சமணர் படுகை உள்ளது. இதனை பாதுகாக்கப்பட்ட குகையாக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், உதவி செயற்பொறியாளர் ஒலிமாலிக், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் அந்த குகைக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் எழுதப்பட்ட எழுத்துக்களையும், சமணர்கள் வாழ்வதற்காக கலை நயத்தடன் அமைக்கப்பட்ட குகையையும் ஆய்வு செய்தனர்.
எவ்வளவு மழை பெய்தாலும் குகைக்குள் மழைநீர் வராத அளவிற்கு மலையைச் செதுக்கி பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த சமணர் படுகை குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும், அதன்மூலம் இந்த சமணர் படுகையை பாதுகாக்கப்பட்ட குகையாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்தார்.
ஆய்வின்போது உசிலம்பட்டி துணை தாசில்தார் ராஜன், நடுமுதலைக்குளம் ஊராட்சி தலைவர் பூங்கொடி பாண்டி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.