search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் தலைமையில் காணொலி காட்சி மூலம் மீனவர் குறைத்தீர்க்கும் கூட்டம்
    X
    கலெக்டர் தலைமையில் காணொலி காட்சி மூலம் மீனவர் குறைத்தீர்க்கும் கூட்டம்

    கடற்கரை கிராமங்களில் மினி ‘கிளினிக்' அமைக்கப்படும்- கலெக்டர் தகவல்

    குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குனர் மோகன்ராஜ் (நாகர்கோவில்), ஊராட்சிகள் உதவி இயக்குனர் சையத் சுலைமான், நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சின்னமுட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகங்கள், மணக்குடி மீன்துறை ஆய்வாளர் அலுவலகம், முட்டம் ஜேப்பியார் துறைமுகத்தில் அமைந்துள்ள சார் ஆய்வாளர் அலுவலகம், தூத்தூர் சார் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றின் வாயிலாக காணொலி காட்சி மூலம் கடலோர உள்ளாட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், நெய்தல் மக்கள் இயக்க மாவட்ட செயலாளருமான குறும்பனை பெர்லின், இனயம்புத்தன்துறை விமல்ராஜ், தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் பாதிரியார் சர்ச்சில், அலெக்சாண்டர் உள்பட ஏராளமான மீனவர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகள் மற்றும் கோரிக்கைகளை வைத்தனர். அதன் விவரம் வருமாறு:-

    மீனவ மக்கள் நெருக்கமாக வாழும் மீனவ கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது. இதுவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்தபாடில்லை.

    இந்தநிலையில் அரசால் தொடங்கப்பட்டுள்ள மினி கிளினிக்குகள் குமரி மாவட்டத்தில் 15 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுகூட மீனவ கிராமத்துக்கு வழங்கப்படவில்லை.

    ஏ.வி.எம். கால்வாய் தண்ணீர் ஓடும் பாதையில் மணலை நிரப்பி சாலை அமைக்கும் மணவாளக்குறிச்சி மணல் ஆலைமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி மணல் ஆலை அதிகாரி என்று பதில் தரப்பட்டுள்ளது. கால்வாயை நிரப்பி சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னால், மணல் ஆலை அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லுவது என்ன நியாயம்? என்று தெரியவில்லை.

    நிவர் புயல் வந்தபோது மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்தப்பட்டனர். புரெவி புயலால் குமரி மாவட்டத்துக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்பேரில் குமரிமாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களும் எச்சரிக்கை கொடுத்து மீண்டும் கரைக்கு வரவழைக்கப்பட்டனர். இதனால் ஒவ்வொரு படகுக்கும் ரூ.2 லட்சம் வரை ந‌‌ஷ்டம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் மீன்பிடிக்கச் செல்லாததாலும், மீன்பிடிக்கச் சென்றவர்கள் திரும்ப வந்ததாலும் மீனவர்களுக்கு சுமார் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து நிவாரணம் வழங்க வேண்டும்.

    மணக்குடி முதல் பெரிய காடு வரையிலான சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும். மீனவர்களுக்கு பயோமெட்ரிக் கார்டுகளை உடனடியாக வழங்க வேண்டும். மீனவ கிராமங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். பிள்ளைத்தோப்பு பகுதியில் சமூக நலக்கூடம் கட்ட அரசுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை சமூக நலக்கூடம் கட்டப்படவில்லை. எனவே அங்கு சமூக நலக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறுவதால் சில நேரங்களில் வீடியோ தெரிவதில்லை. சில நேரங்கள் ஆடியோ கேட்பதில்லை. இதனால் மிகவும் சிரமமாக இருக்கிறது. அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு முதல்-அமைச்சர் அனுமதி அளித்துள்ள நிலையில், வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தை நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடத்த வேண்டும். இல்லாதபட்சத்தில் இந்த கூட்டத்தில் மீனவர்கள் தரப்பில் கலந்து கொள்ள மாட்டோம்.

    இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.

    கலெக்டர் பேசும்போது குமரி மாவட்டத்துக்கு தற்போது முதல் கட்டமாக 15 மினி கிளினிக்குகள் வந்துள்ளன. மொத்தம் 40 மினி கிளினிக்குகள் வர இருக்கிறது. அப்படி வரும்போது கடற்கரை கிராமங்களிலும் மினி கிளினிக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்கள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
    Next Story
    ×