search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    மருத்துவர்கள் பல்வேறு துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டதால் கொரோனா தொற்று தற்போது தமிழகத்தில் படிப்படியாக குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே லத்துவாடியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அம்மா மினிகிளினிக்கை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து மருத்துவ சிகிச்சையையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித்தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தமிழகத்தில் புதிதாக அம்மா மினிகிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதற்கட்டமாக 100 அம்மா மினிகிளினிக்குகள் திறக்கப்பட்டன.

    இந்த மாதம் 31-ந்தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் 2000 மினிகிளினிக்குகள் திறக்க உத்தரவு வழங்கி அதன்படி நேற்று சேலம் மாவட்டத்தில் அம்மா மினிகிளினிக்குகள் திறந்து வைத்து தொடங்கி வைக்கப்பட்டது. அதேபோல் இன்று ஆத்தூர் லத்துவாடியில் நான் திறந்து வைத்துள்ளேன்.

    கிராமத்தில் வாழ்கின்ற மக்களுக்கு திடீரென்று ஏற்படும் தலைவலி, காய்ச்சல் போன்ற சிறிய நோய்களுக்கு அந்த பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ள அம்மா மினிகிளினிக்கை நாடி நோயை போக்கி கொள்வதற்கு ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டர், ஒரு செவிலியர் மற்றும் உதவியாளருடன் அம்மா மினிகிளினிக் செயல்படும்.

    இந்த அம்மா மினிகிளினிக் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4மணி முதல் 7 மணி வரை செயல்படும். இங்கு வருகின்ற நோயாளிகளுக்கு அங்கேயே பரிசோதனை செய்து உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

    அதேபோல ஆரம்ப சுகாதார நிலையத்தில் என்னனென்ன மருத்துவ சிகிச்சைகள் உள்ளதோ? அதே வசதிகள் அனைத்தும் இந்த அம்மா மினிகிளினிக்கில் உள்ளது.

    கிராமத்திலே வாழ்கின்ற மக்கள், குறிப்பாக மக்கள் நிறைந்த பகுதிகளில் அம்மா மினிகிளினிக் தொடங்க வேண்டும் என்ற உத்தரவை வழங்கி இருக்கின்றோம்.

    கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் இரவு, பகல் பாராமல் விவசாயம் செய்து உழைக்கின்ற விவசாயிகள் நிறைந்த பகுதி இந்த பகுதி. நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன், இன்றைக்கும் நான் விவசாயம் செய்து வருகிறேன்.

    கடும் வெயிலிலும், மழையிலும் நனைந்து ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கின்ற வர்க்கம் விவசாய வர்க்கம். அப்படிப்பட்ட உழைக்கின்ற வர்க்கத்திற்கு உழைப்பாளிகளுக்கு, இந்நாட்டிற்கு உணவு கொடுக்கின்ற விவசாய தொழிலாளிக்கு நல்ல மருத்துவம் கிடைப்பதற்காக தான் இந்த அம்மா மினி கிளினிக்கை திறந்துள்ளோம்.

    இந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அம்மா மினிகிளினிக்கில் ஏதாவது மருத்துவ உதவி தேவைப்பட்டால் சிகிச்சை பெற்றுகொள்ளலாம். மேலும் ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் இங்கு பரிசோதனை செய்யப்பட்டு தாலுகா மருத்துவமனை மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

    இதுமட்டுமல்லாமல் நடமாடும் மருத்துவ குழுவும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ குழு எங்கெல்லாம் நோய் அதிகமாக உள்ளது என்று கண்டறிந்தால் அந்த கிராமத்திற்கு உடனடியாக அங்கு அவர்கள் நேரில் சென்று உரிய சிகிச்சை அளிக்க இந்த அரசு உருவாக்கி உள்ளது.

    108 ஆம்புலன்ஸ் வசதிக்காக தற்போது 500 ஆம்புலன்ஸ் வாகனங்களை சேலம் மாவட்டத்திற்கு வழங்கியுள்ளோம்.

    கொரோனா நோய் தொற்று பரவி இருந்தது. அதனை படிப்படியாக குறைத்து இந்தியாவிலேயே இறப்பு சதவீதம் குறைத்த முதல் மாநிலம் தமிழகம்தான்.

    எதிர்க்கட்சி தலைவர் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தார்கள். டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களை பார் என்று கூறி வந்தார்கள். தற்போது டெல்லியிலும், கேரளாவிலும் தமிழகத்தை காட்டிலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. இதனை யாரும் அவர்கள் சுட்டிக்காட்டுவது இல்லை. தற்போது அவர்கள் வாய்பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள். வேண்டுமென்றே அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் மக்களுக்காக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றி வருகிறது இந்த அரசு.

    கொரோனா தொற்று வைரசை நமது மருத்துவர்கள் கடுமையாக எதிர் கொண்டார்கள். மேலும், மருத்துவர்கள் பல்வேறு துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டதால் கொரோனா தொற்று தற்போது தமிழகத்தில் படிப்படியாக குறைந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி உங்களிடம் தெரிவித்து கொள்கிறேன்.

    கிராமத்தில் அதிகமான அரசு பள்ளிகள் உள்ளன. அந்த அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் தமிழகத்தில் 41 சதவீதம் இடம் பெற்றுள்ளனர். அந்த 41 சதவீதம் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களில் கடந்த ஆண்டு வெறும் 6 மாணவர்கள் மட்டுமே ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றனர். தற்போது 3 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகள் மருத்துவ கனவு நனவாகாமல் இருந்தது. அவர்களது கனவை நனவாக்கும் விதமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கியது மூலம் இந்தாண்டு 313 ஏழை, எளிய மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர காரணமாக இருந்தது இந்த அரசு. இது வரலாற்று சாதனையாகும்.

    ‘நீட்’ தேர்வு தி.மு.க. கொண்டு வந்த திட்டம். அப்போது 40 பேர்தான் தமிழகத்தில் இருந்து தேர்வானார்கள்.

    ‘நீட்’ தேர்விற்கு முன்பு தி.மு.க. ஆட்சியின் போது என்.எஸ்.எஸ். கொண்டு வந்தார்கள். அதில் 41 சதவீதம் பயிலும் மாணவர்கள் 40 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்கள். அதன்பிறகு ஜெயலலிதா என்.எஸ்.எஸ்.-யை ரத்து செய்தார்கள். 2010-ம் ஆண்டு காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி வைத்து ‘நீட்’ தேர்வை கொண்டு வந்தார்கள். அதன்பிறகு ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. அந்த குறையை போக்குவதற்காக தற்போது நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 இடஉள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஏனென்றால் நானும் அரசு பள்ளியில் படித்த மாணவன்தான்.

    கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி உள்ஒதுக்கீடு தான். இதற்கு எதிர்கட்சி கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் நடைமுறைப்படுத்தினோம். கிராமத்தில் வாழுகின்ற, உழைக்கின்ற வர்க்கத்திற்கு போதுமான இடம் கிடைக்க வேண்டும்.

    நாட்டுக்கு உணவு கொடுக்கும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்க வேண்டும், அதற்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்த காரணத்தால் இந்தாண்டு அரசு பள்ளிகளில் படித்த 313 பேருக்கு டாக்டருக்கு படிக்க இடம் கிடைத்துள்ளது.

    பல் மருத்துவ கல்லூரியில் 87 பேருக்கு சீட் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு கூடுதலாக இடம் கிடைக்கும். 11 அரசு மருத்துவ கல்லூரிகள் ஒரே நேரம் தொடங்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் 1650 இடம் கிடைத்துள்ளது. அதில் 7.5 சதவீதம் வரும்போது மேலும் அரசு பள்ளிகளில் படித்த 125 பேர் டாக்டர் ஆக வாய்ப்பு உள்ளது.

    இந்தாண்டு 313 பேருக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைத்த நிலையில், அடுத்த ஆண்டு 438 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க பாடுபடுவது எங்களது அரசு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×