search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பழனிசாமி.
    X
    முதல்வர் பழனிசாமி.

    சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி 4 நாட்கள் சுற்றுப்பயணம்

    சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை மினி கிளினிக்கை அவர் திறந்து வைக்கிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் ராமன் மற்றும் அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். சிறிது நேரத்திற்கு பின்னர் அவர் கரூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அரசு விழாவில் பங்கேற்று பேசுகிறார். அதைத்தொடர்ந்து பிற்பகலில் முதல்-அமைச்சர் சேலம் வருகிறார்.

    இதையடுத்து மாலை 4 மணிக்கு சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 52-வது வார்டில் உள்ள கொண்டலாம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசுகிறார். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள். அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

    நாளை (வியாழக்கிழமை) காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த லத்துவாடியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைக்கிறார். இதையடுத்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு நடைபெறும் பல்வேறு அரசு விழாக்களில் கலந்து கொண்டு பேசுகிறார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அவர் மீண்டும் சேலம் திரும்புகிறார்.

    18-ந் தேதி வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வாணியம்பாடியில் மினி கிளினிக்கை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இதையடுத்து காலை 10 மணிக்கு ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு செல்லும் அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதில் மாநகர் மாவட்ட மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    19-ந் தேதி காலை சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு செல்லும் அவர் அங்கு பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 7 மினி கிளினிக்குகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். மாலையில் சேலத்திற்கு திரும்புகிறார். 20-ந் தேதி காலை சேலத்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×