search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அனைத்து வேளாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் - மறியலில் ஈடுபட்ட 20 பேர் கைது

    வேளாளர் சமுதாயத்தின் பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வேளாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    தமிழகத்தில் வேளாளர் சமுதாயத்தின் பெயரை வேறு சமூகத்திற்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த தமிழக அரசை கண்டித்தும், வேளாளர் பெயரை மாற்று சமுதாயத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்தும் சேலத்தில் நேற்று அனைத்து வகை வேளாளர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ஜெயபால், சேலம் மாவட்ட வ.உ.சி. பேரவை மாவட்ட தலைவர் மோட்டார் மனோகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சோழிய வேளாளர் சங்கம், துளுவ வேளாளர் சங்கம், ஆறுநாட்டு வேளாளர் சங்கம், சங்ககிரி வட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம், நாமக்கல் கொங்கு வேளாளர் நண்பர்கள் சங்கம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, கார்காத்த வேளாளர் சங்கம் உள்பட அனைத்து வகையான வேளாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் வேளாளர் சமுதாயத்தின் பெயரை வேறு சமூகத்திற்கு வழங்கக்கூடாது, தமிழக முதல்-அமைச்சர் இந்த பரிந்துரையை உடனே மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சேலம் மாவட்ட வ.உ.சி. பேரவையின் நிர்வாகி பட்டுக்கோட்டை அண்ணாதுரை தலைமையில் சிலர் வேளாளர் பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்கக்கூடாது எனவும், தமிழக அரசை கண்டித்தும் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு கோட்டை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

    Next Story
    ×