search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கோவை தொண்டாமுத்தூரில் காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி

    கோவை தொண்டாமுத்தூரில் இன்று காலை காட்டுயானை தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் மேலும் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
    வடவள்ளி:

    கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஓணாப்பாளையம், தாளியூர், அட்டுக்கல், குப்பேபாளையம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்குள்ள அட்டுக்கல் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் குடிநீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி குடியிருப்புக்குள் நுழைந்து விடுகின்றனர். இதனால் மனித- விலங்கு மோதல் ஏற்பட்டு உயிர் சேதம் நிகழ்ந்து விடுகிறது.

    இந்நிலையில் ஓணாப்பாளையம் யானை மடுவில் இருந்து நள்ளிரவு வெளியே ஒரு காட்டுயானை வந்தது. அது அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. பின்னர் குளத்துப்பாளையம் அருகே வந்தபோது பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையை விரட்டினர். ஆனால் வனத்துறையினரை யானை விரட்டத்தொடங்கியது. இதனால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.

    அப்போது காட்டுயானை தாளியூர் வழியே குளத்துப்பாளையம் சாலையில் நடந்து வந்தது. இன்று அதிகாலை அந்த வழியே வாக்கிங் சென்றவர்கள் காட்டுயானையை பார்த்து சிதறி ஓட்டம் பிடித்தனர். பின்னர் தொண்டாமுத்தூர் அரசு கல்லூரி எதிரே உள்ள வஞ்சிமாநகருக்கு சென்றது.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகம் (வயது 75) என்பவர் தூங்கி எழுந்து அருகில் உள்ள டீ கடைக்கு டீ குடிக்க புறப்பட்டார். கதவை திறந்ததும் வெளியே காட்டுயானை நின்றது. அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் மீண்டும் வீட்டுக்குள் நுழைய முயன்றார். அப்போது ஆக்ரோ‌ஷமாக இருந்த யானை ஆறுமுகத்தை துதிக்கையால் சூழற்றி வீசியது. இதில் அவர் நிலைதடுமாறி விழுந்தார். அப்போது கீழே கிடந்த ஆறுமுகத்தை காட்டுயானை காலால் போட்டு மிதித்தது. இதில் உடல் நசுங்கி ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிர் இழந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு பக்கத்தை வீட்டை சேர்ந்த வாலிபர்கள் ஆறுச்சாமி (19), முத்து (18) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களையும் காட்டுயானை தாக்கியது. இதில் 2 பேரும் காயம் அடைந்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் காட்டுயானையை சத்தம்போட்டு விரட்டினர். யானை அங்குள்ள அருள்ஜோதி நகர் வழியே முத்திபாளையம் வந்தது. அங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மெயின் சுற்றுச்சுவர் அருகே நின்றது.

    தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு வந்து யானையை விரட்டினர். யானை பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவரை இடித்து நொறுக்கிவிட்டு மீண்டும் அட்டுக்கல் வனப்பகுதி அருகே சென்றது. மிகவும் ஆக்ரோ‌ஷமாக உள்ள யானை மீண்டும் ஊருக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    யானை தாக்கி காயம் அடைந்த 2 வாலிபர்களையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி பலியாக ஆறுமுகத்தின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×