search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் கோவிந்தராவ்
    X
    கலெக்டர் கோவிந்தராவ்

    கும்பகோணத்தில் குளங்களை புனரமைக்க நடவடிக்கை - கலெக்டர் கோவிந்தராவ் தகவல்

    கும்பகோணத்தில் குளங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் பகுதியில் கோவில்கள், மடங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமாக 44 குளங்கள் உள்ளன. கும்பகோணம் நகர பகுதிகளில் மட்டும் 8 குளங்கள் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் புனரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நாகேஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான சூரியபுஷ்கரணி குளத்தை பலரும் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். அந்த குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த குளத்தை தூர்வாரி புனரமைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் நேற்று கும்பகோணம் வந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் சூரியபுஷ்கரணி குளம், பழவாத்தான் கட்டளை வாய்க்கால், நால்ரோடு பகுதியில் மின்வாரிய அலுவலக வளாகத்தில் உள்ள குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை பார்வையிட்டார்.

    அப்போது கலெக்டர் கூறுகையில், ‘கும்பகோணம் பகுதியில் உள்ள குளங்களை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றி புனரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சூரியபுஷ்கரணி குளத்தை ரூ.1 கோடி திட்ட மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

    இதைத்தொடர்ந்து கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில் அருகே கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது கும்பகோணம் உதவி கலெக்டர் விஜயன், நகராட்சி ஆணையர் லெட்சுமி, நகர்நல அலுவலர் பிரேமா, அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×