search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமெய்ச்சூரில் மக்களுக்கு நிவாரண பொருட்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கிய போது எடுத்தபடம்.
    X
    திருமெய்ச்சூரில் மக்களுக்கு நிவாரண பொருட்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கிய போது எடுத்தபடம்.

    அதிமுக- பா.ஜனதா கூட்டணியில் குழப்பம் உள்ளது- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் குழப்பம் உள்ளது என திருவாரூரில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
    திருவாரூர்:

    தமிழகத்தில் பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார். அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட பேரளம் திருமெய்ச்சூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து திருவாரூர் சன்னதி தெருவில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, அரிசி, மளிகை, காய்கறி உள்பட நிவாரண பொருட்கள் வழங்கினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் குழப்பம் உள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.- பா.ஜனதா கட்சி உறுதி செய்யப்பட்ட கூட்டணி என தெரிவித்தார். ஆனால் அது அவருடைய கருத்து, ஒட்டு மொத்த அ.தி.மு.கவின் கருத்து அல்ல என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எனவே கூட்டணி குறித்த முடிவை அ.தி.மு.க. தான் தெளிவுபடுத்த வேண்டும். தே.மு.தி.க. பொறுத்தவரை தற்போதைய நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம். வருங்காலத்தில் கூட்டணி முடிவு குறித்து அடுத்த மாதம் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

    ஜனவரி மாதம் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க உள்ளதால், அவர்களுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த் நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும் அதன்பிறகு பதில் சொல்கிறேன் என கூறினார்.

    புயல், மழையில் தமிழக அரசின் செயல்பாடு நிறைகளும், குறைகளும் கலந்தாக உள்ளது. ஒட்டு மொத்தமாக எதுவும் செய்யவில்லை என புறக்கணிக்க முடியாது. மழை நீரை சேமிக்க தடுப்பு அணைகள் கட்ட வேண்டும். இதனை செய்யாததால் தேவையின்றி மழை நீர் கடலில் கலந்து வருகிறது.

    50 ஆண்டுகளாக தமிழகத்தில் மழை நீரை சேமிக்க உரிய கட்டமைப்பு வசதிகள் செய்யாததால் கோடை காலம் வந்தால் தண்ணீர் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தும் நிலையும் இருந்து வருகிறது. எனவே இந்த குறையை சரி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதை குறையாக காண்கிறோம். அதே நேரத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்ட போதிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையால் எந்தவித உயிர் சேதமின்றி நடவடிக்கை எடுத்ததை நிறையாக பார்க்கிறோம். துணை வேந்தர் சூரப்பா விவகாரத்தில் சரியான முடிவை நீதியரசர்கள் தான் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் திருவாரூர் அருகே கள்ளிக்குடி பகுதியில் முகாம்களில் தங்கி இருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது மாவட்ட செயலாளர் சண்முகராஜ், நகர செயலாளர் சதீஷ் உள்பட நிர்வாகிகள் இருந்தனர். இதைப்போல திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, போர்வை, பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார். அப்போது நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் பானு, முன்னாள் மாவட்ட செயலாளர் மகாமுத்துக்குமார் உள்ளிட்ட பலர் அருகில் உள்ளனர்.
    Next Story
    ×