search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது

    திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

    திருப்பூர்:

    சென்னை திருவல்லிக்கேணியில் 108 ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் ஒரு போன் அழைப்பு வந்தது.

    அதில் பேசிய நபர் 115 என்ற கோடு வேர்டுடன் பேச்சை தொடங்கினார். தான் திருப்பூரில் இருந்து பேசுவதாகவும், திருப்பூர் ரெயில் நிலையத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் பதறிபோன அங்கிருந்தவர்கள் சம்பவம் குறித்து சென்னை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அங்கிருந்து திருப்பூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூர் வடக்கு போலீசார், ரெயில்வே போலீசார், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நிபுணர்கள் என 50-க்கும் மேற்பட்ட போலீசார் வெடிகுண்டு சோதனை கருவிகள், துப்பாக்கிகளுடன் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.

    ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கொடுக்கும் இடம், பயணிகள் அமரும் இடம், ரெயில்வே தண்டவாளங்கள், லிப்ட் போன்ற இடங்களில் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். ஆனால் சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வெடிகுண்டு விடுத்த நபர் யார் என்பது குறித்த விசாரணையில் இறங்கினர். போனில் பேசிய நபர் 115 என்று சொன்னதால் அந்த நம்பர் என்னவாக இருக்கும். ஏதாவது கோர்டு வேர்டாக இருக்குமா? அல்லது ஏதாவது முகவரியா என்ற கோணத்தில் விசாரித்தனர். ஆனால் அதில் எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறினர்.

    பின்னர் போனில் பேசிய நபரின் போன் நம்பரை வைத்து அவரை கண்டுபிடிக்க முடிவு செய்தனர். இதற்காக சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடினர். போன் நம்பரை வைத்து பார்த்த போது அந்த செல்போன் டவர் திருப்பூர் பழைய பஸ்நிலையம் அருகே அருள்புரத்தில் உள்ள விடுதியை காண்பித்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஒவ்வொரு அறையாக சோதனை மேற்கொண்டனர். அப்போது 115 என்ற அறையில் தங்கி இருந்த நபர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தேனியை சேர்ந்த ஆனந்த்(30) என்பது தெரியவந்து. இவர் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் முடித்து விட்டு திருப்பூர் அருள்புரம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் அவர் குடிபோதையிலும் இருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று எதற்காக வெடிகுண்டு இருப்பதாக போன் செய்தார்? யாராவது போன் செய்ய சொன்னார்களா? அல்லது மதுபோதையில் போன் செய்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×