search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.
    X
    தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

    3 நாட்களாக பெய்த கனமழை : வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி

    கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் தூத்துக்குடி தத்தளிக்கிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. ஆனாலும் பெரிய அளவில் மழை பெய்யாமல் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. கடந்த மாதம் 16-ந் தேதி முதல் சில தினங்கள் பலத்த மழை பெய்தது.

    அப்போது பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமப்பட்டனர். பின்னர் தூத்துக்குடியில் மழை பெய்யாமல் இருந்தது. அதன்பிறகு புரெவி புயலால் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், லேசான சாரல் மழையுடன் புரெவி புயல் பதுங்கி கொண்டது.

    இந்த புயல் வலுவிழந்த பிறகு தூத்துக்குடியில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடியில் பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. நேற்று காலையிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வழக்கமாக மழைநீர் தேங்கும் அத்தனை பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியது. இதனால் தூத்துக்குடி வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

    ஏற்கனவே, தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோடு மழை வெள்ளம் தேங்கியதாலும், ஸ்மார்ட்சிட்டி சாலை பணிகள் நடப்பதாலும் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் பிரையண்ட்நகர் வழியாக சுற்றி சென்று வருகின்றன. பிரையண்ட்நகர் பகுதியிலும் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

    அதேபோன்று திருச்செந்தூர் ரோடு, சிவந்தாகுளம் ரோடு சந்திப்பு பகுதியில் நீண்ட காலமாக தண்ணீர் தேங்கி கிடக்கிறது. தற்போது அங்கு சுமார் 1 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீருடன், கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் கழிவுநீரில் வாகனத்துடன் விழுந்து செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பக்கிள்புரம் வழியாக சென்று வருகின்றனர். அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி பழைய மாநகராட்சி, புதிய மாநகராட்சி அலுவலகத்தையும் வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதேபோன்று தனசேகர்நகர், முத்தம்மாள்காலனி, ஸ்டேட்வங்கி காலனி, செல்வநாயகபுரம், லூர்தம்மாள்புரம், குறிஞ்சிநகர், செயிண்ட்மேரீஸ் காலனி, பிரையண்ட்நகர் உள்பட பெரும்பாலான இங்களில் மழைநீர் குளம்போல் காட்சி அளித்தது. இதனால் மேடு, பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் தண்ணீரில் விழுந்து விபத்துகள் ஏற்பட்டன. அதே போன்று பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மிகுந்த சிரமத்துக்கு ஆளான மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி ஸ்டேட்வங்கி காலனி, செல்வநாயகபுரம், அம்பேத்கர்நகர் பகுதி மக்கள் ஸ்டேட் வங்கி காலனியிலும், லூர்தம்மாள்புரம், வட்டக்கோவில் அருகேயும், குறிஞ்சிநகர் பகுதி மக்கள் 4-ம் கேட் அருகேயும், செயிண்ட் மேரீஸ் காலனி உள்ளிட்ட 7 இடங்களில் மழைநீரை அகற்றக்கோரி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    காயல்பட்டினத்தில்- 13, விளாத்திகுளம்- 3, காடல்குடி- 4, வைப்பார்- 5, சூரங்குடி- 13, கோவில்பட்டி- 7, கழுகுமலை- 2, கயத்தார்- 4, எட்டயபுரம்- 25, சாத்தான்குளம்- 3.6, ஸ்ரீவைகுண்டம்- 8, தூத்துக்குடி- 6.
    Next Story
    ×