search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் எம்பிபிஎஸ் படிப்பில் இடஒதுக்கீடு வழங்க கோரிய மனு-தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

    7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் தங்களது கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 2,400 அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளிகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தங்களுடைய பள்ளிகளுக்கும் அரசு பள்ளிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றும் அரசு பள்ளிகளுக்கான சலுகைகள், கொள்கைகள், பாடத்திட்டம், போதிக்கும் முறை, உதவிகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளியில் படித்த மாணவிக்கு மட்டும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்பது பாரபட்சமானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர் படிப்பதாகவும் எனவே அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் இடம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
    Next Story
    ×