search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டா கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை வண்ணாரம்பூண்டி கிராம மக்கள் முற்றுகையிட்ட போது எடுத்த படம்.
    X
    பட்டா கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை வண்ணாரம்பூண்டி கிராம மக்கள் முற்றுகையிட்ட போது எடுத்த படம்.

    பட்டா கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

    பட்டா கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு மனுக்கள் போடுவதற்காக தனிப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அருகே உள்ள வண்ணாரம்பூண்டி ரேஷன் கடை தெருவை சேர்ந்த பொதுமக்கள் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்குள்ள தனிப்பெட்டியில் ஒரு புகார் மனு போட்டனர்.

    அதில், எங்கள் தெருவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் நாங்கள் 30 குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டு வீடுகளில் வசித்து வருகிறோம். இந்த நிலையில் அங்கு வசித்து வந்த ஒருவரது வீடு இடிந்ததையடுத்து, அவர் கான்கிரீட் வீடு கட்டினார். அரசு புறம்போக்கு நிலத்தில் எப்படி கான்கிரீட் வீடு கட்டலாம் என்றும், அந்த வீட்டையும், மற்ற வீடுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தனர். இதனால் தற்போது எங்களை வீட்டில் இருந்து காலி செய்து, வேறு இடத்துக்கு செல்லுமாறு அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். எனவே எங்களுக்கு அதே வீடுகளில் வசிப்பதற்கும், அந்த இடத்திற்கு பட்டா வழங்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    வேப்பந்தட்டை தாலுகா பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த குமார் தனது மனைவி மற்றும் உறவினருடன் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியில் ஒரு மனு போட்டார். அதில், எனது மகள் பிரேமாவும், ஒரு வாலிபரும் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த வாலிபர் அவரது பெற்றோரின் தூண்டுதலின் பேரில் எனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார். இந்நிலையில் பிரேமா கடந்த செப்டம்பர் மாதம் அந்த வாலிபர் வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். இது தொடர்பாக அரும்பாவூர் போலீசாரும், வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தியும், எனது மகள் இறந்ததற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தற்போது அந்த வாலிபர் மது குடித்து விட்டு எங்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகிறார். எனது மகளின் சாவுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கலெக்டர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, இறந்த எனது மகளுக்கு நீதி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 மனுக்களும், வேப்பந்தட்டையில் 9 மனுக்களும், குன்னத்தில் 8 மனுக்களும், ஆலத்தூரில் ஒரு மனுவும், கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியில் இருந்து 28 மனுக்களும் என மொத்தம் 73 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து ஆய்வு மேற்கொண்டு தகுதி வாய்ந்த மனுக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்கிட அந்தந்த அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா அறிவுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×