search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பகுதி நேர ஆசிரியர்களை படத்தில் காணலாம்.
    X
    கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பகுதி நேர ஆசிரியர்களை படத்தில் காணலாம்.

    கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் மனு

    கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் மனு அளித்தனர்.
    கரூர்:

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலால் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கரூர் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்களை போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    கரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் சார்பில் போட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 2011-12-ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்டு, உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி (கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி) ஆகிய கல்வி இணைச்செயல்பாடுகளை இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறோம். தற்போது 10-வது கல்வியாண்டு நடக்கிறது. ஊதிய உயர்வு 3-வது கல்வியாண்டில் ரூ.2 ஆயிரமும், 6-வது கல்வியாண்டில் ரூ.700 வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஊதியம் உயர்த்தப்படவில்லை.

    இந்த ரூ.7,700 தொகுப்பூதியத்தில் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றோம். கடந்த 9 வருடமாக மே மாதம் சம்பளம் வழங்கவில்லை. இதனால் ஒவ்வொருவரும் ரூ.60 ஆயிரத்தை இழந்து தவிக்கின்றோம். போனஸ், பண்டிகை முன்பணம், 7-வது ஊதியக்குழு 30 சதவீத ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு, வருங்கால வைப்பு, இ.எ.ஸ்.ஐ. இதுவரை வழங்கவில்லை. எனவே 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களின் குடும்ப நலன் மற்றும் வாழ்வாதாரம் காத்திட பணி நிரந்தரம் செய்ய வேண்டும்என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதேபோல பல்வேறு மனுக்கள் புகார் பெட்டியில் போடப்பட்டது.
    Next Story
    ×