search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுப்பிக்கப்பட்ட ஊட்டி மலை ரெயில்
    X
    புதுப்பிக்கப்பட்ட ஊட்டி மலை ரெயில்

    தாறுமாறான கட்டண உயர்வு... தனியார்மயமான ஊட்டி மலை ரெயில்

    சிறப்பு மலை ரயிலை தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி உள்ளார்.
    கோவை: 

    கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 8 மாதமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. வரலாற்று சிறப்புமிக்க ஊட்டி மலை ரெயில் இயக்கமும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் இப்போது நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறையில் அனுமதிக்கப்பட்டுகின்றனர். மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் சேவையும் தொடங்கியது. ஆனால், இந்த சேவையை தெற்கு ரெயில்வே தனியார் நிறுவனத்திற்கு ஜனவரி மாதம் வரை குத்தகைக்கு விட்டுள்ளது. 

    இந்த மலை ரெயில் டி.என்.43 என பெயரிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த மலை ரெயில் கட்டணம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏழை, எளிய மக்கள் இந்த ரெயிலில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. 

    டிசம்பர் 5, 6 ஆகிய நாட்களில் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதேபோல் 12 மற்றும் 13 ஆகிய நாட்களிலும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் உள்ள வரவேற்பைப் பொருத்து ஜனவரியில் இருந்து, தினமும் தனியார் மலை ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மலை ரெயிலை முற்றிலும் தனியார்மயமாக்கும் முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில் ஊட்டி மலை ரெயிலை தனியாரிடம் ஒப்படைத்த நடவடிக்கையை கண்டித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மலையை குடைந்து நூற்றுக்கணக்கான உழைப்பாளர்களின் உழைப்பில் ஊட்டி ரயில் வழித்தடம் உருவாக்கப்பட்டது.   மிக முக்கியமான சுற்றுலா மலைப் பாதை என்பதால் இதற்கு யுனெஸ்கோவின் விருதை பெற்றுள்ளது.

    கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் இதன் வழித்தடத்தில் சிறப்பு ரயிலும் கட்டணம் அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தது. சுமார் 4.5 லட்சம் ரூபாய் ரயில்வேக்கு கட்டணம் செலுத்தி சிறப்பு ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே துறையே இயக்க வேண்டும் என தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். இந்நிலையில் கொரானா தொற்று காரணமாக மலை ரயில் சேவையும், சிறப்பு ரயில் கட்டண சேவையும் நிறுத்தப்பட்டது.

    தற்போது வரை உதகை செல்ல இ பாஸ் நடைமுறை இருந்து வருகின்றது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்,  மொத்தமாக ரயில்வே நிர்வாகத்திற்கு  கட்டணத்தை செலுத்தி சிறப்பு மலை ரயிலை வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறார்.

    மலை ரயிலில் பயணிக்க நபர் ஒருவருக்கு ரூ.2,500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சிறப்பு ரயிலில் இருக்கும் தனியார் நிறுவன பணிப்பெண்கள்,  விமானத்தில் பயணிகளுக்கு உணவு பொருட்களை கொடுப்பது உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளனர். இதுஒருபுறமிருக்க ரயிலின் முன் பகுதியில் தெற்கு ரயில்வே இலட்சினைகள்  எதுவும் இல்லாமல் டிஎன்-43 என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. மேலும் ரயிலின் முன்புற பகுதியும் காவி வண்ணத்தில் மாற்றப்பட்டு உள்ளது.

    மேலும் வழக்கமாக இயக்கப்படும் மலைரயில் சேவை இதுவரை துவங்காத நிலையில், சிறப்பு கட்டண ரயில் சேவை மட்டும் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து இருக்கிறது. கட்டண ரயிலை மொத்தமாக தனியாருக்கு வாடகைக்கு விடுவதன் மூலம், சிறப்பு கட்டண ரயில் கொண்டு வரப்பட்டு இருப்பதன் நோக்கத்தை சிதைப்பதுடன், தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் ஊட்டி ரயில்  தாரைவார்க்கப்பட்டு உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக ரயில்வே துறை உதகை சிறப்பு மலை ரயிலை தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×