search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்ட காட்சி
    X
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்ட காட்சி

    பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 55 பேர் கைது

    பழனியில் வேளாண் சட்ட நகலை எரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பழனி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பழனியில் 6-வது நாளாக நேற்று வேளாண் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.

    போராட்டத்தின் போது பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் உருவ படங்கள் மற்றும் வேளாண் சட்ட திருத்த நகலை தீயிட்டு எரித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பழனி டவுன் போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 55 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல அய்யலூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதையடுத்து அவர்களை தடுத்த வடமதுரை போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாலுபாரதி உள்பட 24 பேரை கைது செய்தனர்.

    வேடசந்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 118 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×