search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அருகே உழவு பணி நடப்பதை காணலாம்
    X
    தூத்துக்குடி அருகே உழவு பணி நடப்பதை காணலாம்

    தாமிரபரணி வடிநில கோட்டத்தில் குளங்கள் நிரம்பியதால் விவசாய பணிகள் தொடக்கம்

    தாமிரபரணி வடிநில கோட்டத்தில் குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் அமைவிடமானது, புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பாக உள்ளது. இங்கு உள்ள மன்னார் வளைகுடா 21 தீவுகளை கொண்டு உள்ளது. புயல் சீற்றங்கள் வந்தாலும், இந்த தீவுக்கூட்டங்களால் வலுவிழந்து விடும். அதே நேரத்தில் மழை மட்டும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கிடைத்து வந்தது.

    1992-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு பாம்பன், கன்னியாகுமரி இடையே புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தை புயல் தாக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இதன் காரணமாக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் புரெவி புயல் எந்தவித மழையையும் கொடுக்காமல் பதுங்கி கொண்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் 429.4 மில்லி மீட்டர் மழை கிடைக்கும். ஆனால் இதுவரை 300.5 மில்லி மீட்டர் மழை மட்டுமே கிடைத்து உள்ளது. அக்டோபர் மாதம் சராசரி மழையான 150.7 மில்லி மீட்டரில், 34.92 மில்லி மீட்டர் மழை மட்டுமே கிடைத்து உள்ளது. நவம்பர் மாதம் சராசரி மழையான 184.7 மில்லி மீட்டரை விட அதிகமாக 250.73 மில்லி மீட்டர் மழை பெய்தது. டிசம்பர் மாதம் சராசரி மழையான 94 மில்லி மீட்டரில் 14.85 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இதனால் 128.9 மில்லி மீட்டர் மழை பற்றாக்குறையாக உள்ளது. இந்த பற்றாக்குறையை புரெவி புயல் தீர்க்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    மாவட்டத்தில் தாமிரபரணி வடிநில கோட்டத்தில் உள்ள 53 குளங்களும் முழுமையாக நிரம்பி உள்ளன. அதே நேரத்தில் கோரம்பள்ளம் வடிநில கோட்டத்தில் உள்ள 54 குளங்களில் 11 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. 14 குளங்கள் 75 சதவீதமும், 16 குளங்கள் 50 முதல் 75 சதவீதமும், 11 குளங்கள் 25 முதல் 50 சதவீதமும், 2 குளங்கள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன. இதே போன்று பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 407 குளங்களில் 29 குளங்கள் மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளன. 76 குளங்கள் 75 சதவீதத்துக்கு அதிகமாகவும், 121 குளங்கள் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையும், 106 குளங்கள் 25 முதல் 50 சதவீதமும், 75 குளங்கள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன. தற்போது தாமிரபரணி வடிநில கோட்டத்தில் உள்ள குளங்கள் நிரம்பி இருப்பதால், விவசாயிகள் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். தாமிரபரணி நேரடி பாசனத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நெல் நாற்றங்கால்கள் ஏற்கனவே தயாரான நிலையில், நாற்று நடும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

    அதே நேரத்தில் மானாவாரி பயிர்களுக்கு போதுமான தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தற்போது மழை பெய்தால் மட்டுமே நல்ல மகசூலை ஈட்ட முடியும் என்பதால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
    Next Story
    ×