search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் - துணை முதலமைச்சர் மரியாதை
    X
    ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் - துணை முதலமைச்சர் மரியாதை

    4ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர்- துணை முதலமைச்சர் மரியாதை

    சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

    இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திரண்டு வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

    அதன் பிறகு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழியை வாசிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றனர்.

    உறுதி மொழியில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-

    இந்திய அரசியல் வானில் சுடர்மிகு நட்சத்திரமாய் ஒளி வீசிய தங்கத் தாரகை புரட்சித்தலைவி அம்மாவின் நினைவு நாளான இன்று நம் அன்பிற்கும், போற்றுதலுக்கும் உரிய அம்மா நீடுதுயில் கொள்ளும் இந்நினைவிடத்தில் நிற்கும் நாமும், எங்கெங்கும் வாழ்கின்ற கழக உடன் பிறப்புகளும் கீழ்காணும் உறுதிமொழியை ஏற்போம்.

    தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும், அம்மாவின் தியாக வாழ்வையும், அயரா உழைப்பையும் மனதில் கொண்டு அவர் காட்டிய வழியில் அ.தி.மு.க.வை கட்டிக்காத்திடுவோம்.

    புரட்சித்தலைவி அம்மா தமது வாழ்வின் மிக அற்புதமான 34 ஆண்டுகளை கழகத்திற்காக அர்ப்பணித்து வாழ்ந்த தியாகச் செம்மல், அம்மா கழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகளை, எந்நாளும் நினைவில் கொண்டு கடமை உணர்வோடு பணியாற்றிட உளமார உறுதி ஏற்கிறோம்.

    அ.தி.மு.க. என்பது ஆயிரம் காலத்துப் பயிர், இது தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்ற தழைத்து நிற்கும் ஆலமரம் என்று உரைத்த புரட்சித்தலைவியின் முழக்கத்தின்படி கழகத்தின் மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெற உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

    தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் ஏற்றம் பெற்று, அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும் மாநிலமாக திகழ்வதை, தமது ஆட்சிக் காலத்தில் உறுதி செய்தார் நம் அம்மா. புரட்சித்தலைவியின் உழைப்பால் உருவான கழக அரசு புரட்சித்தலைவி அம்மா காட்டிய வழியில் நிறைவேற்றி வரும், எண்ணற்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள், அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்வோம்.

    தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், ஓடோடிச் சென்று உதவும் உற்ற துணையாகவும், வழிகாட்டும் ஒளி விளக்காகவும் திகழ்கின்ற வகையில் அ.தி.மு.க.வை உருவாக்கிய சிந்தனை சிற்பி புரட்சித்தலைவி. அம்மா வகுத்து தந்த அரசியல் பாதையில் அ.தி.மு.க. வெற்றி நடைபோட இயன்ற அனைத்தையும் செய்வோம், செய்வோம்.

    ஜனநாயகத்தின் பெயரில் ஒரு குடும்ப ஆட்சி நிலை பெற்று விட்டால், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல இயலாது என்பதை விளக்கிக்கூறிய அரசியல் ஆசான், புரட்சித்தலைவி அம்மா. அவர் காட்டிய உண்மையான ஜனநாயகம் வேரூன்றவும், ஒரு குடும்பத்தின் ஏக போக அரசியலும், ஆட்சியும் ஏற்படாத வண்ணம், மக்களாட்சியின் மாண்புகளை காப்போம்.

    இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட நேரங்களில், சுற்றிச்சுழன்று, அல்லும், பகலும் அயராது பாடுபட்டவர் நம் புரட்சித்தலைவி அம்மா. அவர் காட்டிய வழியில் பல்வேறு இயற்கைப் பேரிடர் நேரங்களில், தமிழ்நாட்டு மக்களுக்காக அற்புதமாய் பணியாற்றும் கழக அரசின் சிறப்பான பணிகளை, மக்களிடம் கொண்டு சேர்க்க உறுதி ஏற்கிறோம்.

    ஏழை, எளியோருக்கு சமூகப் பாதுகாப்பு, பெண்களுக்கும், முதியவர்களுக்கும் முன்னுரிமை, கிராமப்புற மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டங்கள் என்று புரட்சித் தலைவி அம்மா, எம்.ஜி.ஆர் வழியில் ஆட்சி நடத்தினார். நம் இரு பெரும் தலைவர்களின் எண்ணப்படி, நடைபெறும் கழக அரசின் சாதனைகள் தொடர, அயராது உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

    “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்தார் நம் புரட்சித்தலைவி அம்மா. அந்த அன்புத்தாயின் சபதத்தை நிறைவேற்றும் வகையில் 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அம்மாவின் கடமை தவறான பிள்ளைகளாக ஒன்றுபட்டு உழைத்து, தொடர்ந்து 3-வது முறையாக, கழகத்தை மகத்தான வெற்றி பெறச் செய்வோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.

    “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?” என்று, கழகத்தின் வீர அணிவகுப்புகளைக் கண்டு, வெற்றி முழக்கம் செய்தவர் புரட்சித்தலைவி அம்மா.

    நமது ஒற்றுமையே, நமது வெற்றிக்கு அப்படை.

    நமது முயற்சியே கழகத்தின் வெற்றி.

    கழகத்தின் வெற்றியே, புரட்சித்தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோருக்கு நாம் செலுத்தும் காணிக்கை என்பதை உணர்ந்து, அயராது உழைப்போம், உழைப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.

    கழகம் காப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு தழைக்க, கழகம் காப்போம்.

    போற்றிடுவோம், போற்றிடுவோம் புரட்சித் தலைவியின் புகழை போற்றிடுவோம்.

    வென்றிடுவோம், வென்றிடுவோம், களங்கள் அனைத்திலும் வென்றிடுவோம்.

    வாழ்க புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புகழ், வாழ்க புரட்சித்தலைவி அம்மாவின் புகழ்.

    இவ்வாறு உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

    அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம், அமைச்சர்கள் செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.காமராஜ், கடம்பூர் எஸ்.ராஜூ, கே.பி. அன்பழகன், ராஜேந்திரபா லாஜி, விஜயபாஸ்கர், மா.பா.பாண்டிய ராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள், பொன்னையன், பா. வளர்மதி, கோகுலஇந்திரா, நத்தம் விசுவநாதன், தமிழ்மகன் உசேன், சோமசுந்தரம், முத்தியால்பேட்டை ரஞ்சித்குமார், பெரும்பாக்கம் ராஜசேகர், வேளச்சேரி அசோக், மின்சாரம் சத்திய நாராயணமூர்த்தி, ஆர்.எம். டி.ரவீந்திர ஜெயின், முகப்பேர் இளஞ்செழியன், உங்களுக்காக டாக்டர் சுனில், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி,

    மாவட்ட செயலாளர்கள் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் சச்சின் மணி, பெரம்பூர் முகேஷ், சைதை சொ.கடும்பாடி, திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் எம்.ஜி.ஆர். எஸ்.வாசன், அண்ணாநகர் இளங்கோவன், பார்த்தாஸ் கிருஷ்ணமூர்த்தி, சைதை பி.டி.சி. முனுசாமி, கொளத்தூர் கணேசன், ஜி.ஆர்.பி.கோகுல், கோதண்டன், வில்லிவாக்கம் ஜெய் சுரேஷ்.

    அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில துணை செயலாளர் ஈ.வி.சேகர், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விருகை ரவி, பகுதி செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ், முருகன், சேக்அலி, சைதை சுகுமார், வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மனோகரன், வாண்டையார் டி.யூ.சி.எஸ்.சேர்மன், வழக்கறிஞர் தேவேந்திரன், சிவ ராமகிருஷ்ணன், விருகை பாபு, பன்னீர்செல்வம், எஸ்.பி.குமார், குட்டி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×