search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி
    X
    வீராணம் ஏரி

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் 95 சதவீதம் நிரம்பிவிட்டன

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருவதால் ஏரி, குளங்கள், கால்வாய்கள் நிரம்பி உள்ளது. இதனால் ஒரு ஆண்டுக்கான குடிநீர் தேவையை சமாளிக்க போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள், கால்வாய்கள் நிரம்பிவிட்டன.

    வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவான 2 புயலின் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி விட்டன.

    இதேபோல சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியும் நிரம்பி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், வீராணம் ஏரியின் 1.13 டி.எம்.சி. தண்ணீர் தற்போது உள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய அனைத்து ஏரிகளும் நிரம்பும் நிலையில் இருப்பதால், அதிலிருந்து தண்ணீர் அதிகளவு வெளி யேற்றப்படுகிறது. நீர்வரத்தும் அதிகரித்து வருவதால், குறிப்பிட்ட அளவு தண்ணீரை பொதுப் பணித் துறை கண்காணித்து வெளியேற்றி வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 5,187 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியில் இருந்து 6,067 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 2.8 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சோழவரம் ஏரியில் 65 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. செங்குன்றம் ஏரியில் 727 கன அடி தண்ணீர் வருகிறது. இதில் 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 3 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2,040 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதில் இருந்து 1,625 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியில் 3.2 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    கண்ணன்கோட்டை ஏரிக்கு 75 கன அடி தண்ணீர் வருகிறது. 1.2 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    வீராணம் ஏரிக்கு 2,375 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 5,755 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியில் 1.13 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பருவமழையின் காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் குறிப்பிட்ட அளவு தண்ணீரை இருப்பு வைத்துக் கொண்டு, பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படுகிறது. அனைத்து ஏரிகளும் 95 சதவீதம் நிரம்பிவிட்டன.

    இன்றைய நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய அனைத்து ஏரிகள் மூலம் 11 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஒரு மாதத்திற்கு 1 டி.எம்.சி. தண்ணீர் சென்னை மக்களின் குடிநீர் தேவையை சமாளிப்பதற்கு போதுமானது.

    எனவே ஒரு ஆண்டுக்கான குடிநீர் தேவையை சமாளிக்க போது அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் கோடை காலத்தை பற்றி கவலைப்படத் தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×