search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த ரவீந்திரநாத் எம்.பி. பேசியபோது எடுத்த படம்.
    X
    அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த ரவீந்திரநாத் எம்.பி. பேசியபோது எடுத்த படம்.

    கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழகம் மிகுந்த அக்கறையுடன் மேற்கொள்ளும்- அ.தி.மு.க. எம்.பி. உறுதி

    கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த உடன் அதனை போடுவதற்கான பணிகளை தமிழகம் மிகுந்த அக்கறையுடன் மேற்கொள்ளும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் கூறினார்.
    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி காட்சி மூலமாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் எம்.பி. ரவீந்திரநாத் கலந்துகொண்டு பேசியதாவது:-

    அனைத்து மாவட்டங்களிலும் 1.16 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை (ஆர்.டி.பி.சி.ஆர்) செய்துள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு. ஒவ்வொரு வீடு தோறும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினமும் 3 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தி இதுவரை சுமார் 2.71 கோடி மக்கள் பயனடைந்துள்ளார்கள். ஏழை-எளிய மக்கள் மருத்துவ ரீதியாக பயனடையும் வகையில் மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்குகள்’ தொடங்கப்பட உள்ளன.

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஆய்வுகளையும், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மாவட்டந்தோறும் செய்து வருகிறார்கள். தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளால் கொரோனா தொற்றிலிருந்து மீண்டோர் சதவீதம் மாநிலத்தில் 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்துக்கும் குறைவாகவே தமிழ்நாட்டில் இருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மாநில அளவிலான பணிக்குழு மற்றும் கண்காணிக்கும் குழுக்களின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட மற்றும் வட்டார அளவிலான கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டமாகவே கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றாலும் 3 கோடி ‘டோஸ்’ அளவிற்கான மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில் நடமாடும் 51 குளிரூட்டிகள் (வாக் இன் கூலர்ஸ்) மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 47 ஆயிரத்து 209 தடுப்பூசி போடும் மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பி.சி.ஆர். பரிசோதனையை அனைத்து மாநிலங்களும் தீவிரமாக மேலும் சில மாதங்களுக்கு மேற்கொண்டு கண்காணிப்பில் கவனமாக இருக்கவேண்டும். தடுப்பூசி போடுவது குறித்த வழிகாட்டுதல்கள் திட்டங்களை மாநில அரசுகளுடன் மத்திய அரசு முன்கூட்டியே பகிர்ந்து கொள்ளவேண்டும். கொரோனா தடுப்பூசி, சிரிஞ்ச் கொள்முதல் செய்து, அவற்றை குளிரூட்டிகளில் வைப்பதற்கான போக்குவரத்து நடைமுறைகள் ஆகியவற்றை மத்திய அரசே செய்யுமா? அல்லது மாநில அரசுக்கும் அதில் பொறுப்பு இருக்குமா? என்பதை முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும்.

    மாநிலத்தில் ஏதோனும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படுமா? அல்லது மாவட்ட அளவில் விநியோகிக்கப்படுமா? என்பது குறித்த விவரங்களையும் முன் கூட்டியே தெரிவித்தால் மாநில அரசுகள் திட்டமிடுவதற்கு ஏதுவாக இருக்கும். கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு முழு வீச்சில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. தடுப்பூசி எப்போது வழங்கப்பட்டாலும் அதையும் இதே உத்வேகத்துடனும், மிகுந்த அக்கறையுடனும் மக்களுக்கு வழங்கும் பணியிலும் தமிழக அரசு தீவிரமாக ஈடுபடும் என்று உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×