search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    செயல்படாத தலைவர்களை மாற்ற முடிவு- தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் அடுத்த வாரம் மாற்றம்

    புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    சென்னை:

    சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. ஆகியவை தமிழ்நாட்டில் மாவட்டங்களை கூடுதலாக பிரித்துள்ளன. இதற்கான புதிய மாவட்ட செயலாளர்கள், புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றன.

    தமிழக காங்கிரஸ் கட்சியும் மாநில அளவில் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. தேர்தலுக்கு சில மாதங்கள் இருப்பதால் மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகளை உடனே நியமிக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக பெரிய மாவட்டங்களை பிரித்து கூடுதலாக மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி புதிய நிர்வாகிகளுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த பட்டியல் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மாவட்ட தலைவராக இருப்பவர்களில் சிலர் செயல்படவில்லை என்று தொண்டர்கள் புகார் செய்தனர். இதையடுத்து அவர்களுடைய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் செயல்படாத மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மாற்றப்படுகிறார்கள்.

    இவை தவிர புதிதாக பிரிக்கப்படும் மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள், அவர்களின் கீழ் செயல்படும் நிர்வாகிகள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலும் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    சென்னையில் தற்போது காங்கிரஸ் சார்பில் 4 மாவட்டங்கள் உள்ளன. 4 மாவட்ட தலைவர்கள் அவர்களின் கீழ் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தற்போது சென்னை 8 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான புதிய மாவட்ட தலைவர்களும், நிர்வாகிகளும் நியமிக்கப்படுகிறார்கள்.

    மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தவிர மாநில அளவில் துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்களும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலும் தயாராகி இருக்கிறது.

    புதிதாக ஒருசில நிர்வாகிகளை நியமிப்பது, செயல்படாதவர்களை மாற்றுவது தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவை பேசி தீர்க்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியானதும் அவர்களுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ராகுல்காந்தி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார். அவரது பிரசார திட்டம் பற்றிய ஆலோசனை கூட்டம் நேற்று சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.

    காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயண திட்டம் முடிவு செய்யப்பட்டது.

    இதில் ராகுல்காந்தியின் சுற்றுப் பயண திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான டெல்லி பிரதிநிதி பைஜோ, புள்ளி விவர தயாரிப்பாளர் பிரிவீன் சக்ரவர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களுடைய ஆலோசனைகளின்படி சுற்றுப்பயண பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

    தேர்தல் பணிகள் குறித்து தமிழ்நாடு எஸ்.டி. பிரிவு ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதற்கு இதன் தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.

    இதில் முன்னான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிவகாமி, கிறிஸ்டோபர் திலக் மற்றும் காங்கிரஸ் எஸ்.டி. பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேர்தலில் எஸ்.டி. பிரிவின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
    Next Story
    ×