search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    ரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு?

    தமிழகத்தின் அரசியல் அடித்தளமே ரஜினியின் வருகையால் மாறக்கூடும் என்று பல பெரிய கட்சிகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.
    ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காமராஜர் காலத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சியே நடந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகளின் வலுவான சூழ்நிலை தேசிய கட்சிகளை தமிழ்நாட்டு பக்கமே வரவிடாமல் மாற்றி இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவும் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் தி.மு.க., அ.தி.மு.க.வை அசைத்து பார்க்க இயலவில்லை. இந்த சூழ்நிலையில்தான் தற்போது ரஜினிகாந்த் அடுத்த மாதம் புதிய கட்சியை தொடங்க போவதாக அறிவித்து இருக்கிறார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசும், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவும் நீடிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரஜினியின் புதிய கட்சி கூட்டணிகளை உடைத்து சிதற வைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    கூட்டணி மட்டுமின்றி தமிழகத்தின் அரசியல் அடித்தளமே ரஜினியின் வருகையால் மாறக்கூடும் என்று பல பெரிய கட்சிகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. ரஜினி கணிசமான வாக்குகளை பிரிக்க வாய்ப்பு இருப்பதால் அது எந்த பெரிய கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் தற்போதைய அரசியல் வல்லுனர்களின் பரபரப்பு விவாதமாக மாறி உள்ளது.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை ரஜினியை பா.ஜனதா மூலம் வளைத்து பிடிக்க மறைமுக முயற்சிகள் நடக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் ரஜினி பிடி கொடுப்பாரா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வரும் அ.தி.மு.க. ரஜினியை எப்படி எதிர்கொள்ளும் என்பதில் மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.

    விஜயகாந்த் அரசியலுக்கு வந்து 2006-ம் ஆண்டு தேர்தலின்போது தனித்து போட்டியிட்டதால் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார். அவர் பிரித்த 8.5 சதவீத வாக்குகள் சுமார் 100 தொகுதிகளின் வெற்றி, தோல்வியை மாற்றி அமைத்தது.

    அதே சூழ்நிலையை ரஜினியும் ஏற்படுத்தினால் நிச்சயமாக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி, தோல்வி மாறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த வெற்றி, தோல்வி அ.தி.மு.க.வை பாதிக்குமா, தி.மு.க.வை பாதிக்குமா என்பதில்தான் மாறுப்பட்ட கருத்துக்கள் உள்ளன.

    தி.மு.க.வை பொறுத்தவரை நேற்று முன்தினம் வரை அந்த கட்சியின் அனைத்து தலைவர்களும் 100 சதவீத வெற்றி கிடைக்கும் என்று முழு மனதுடன் நம்பி கொண்டிருந்தனர். ரஜினியின் அறிவிப்புக்கு பிறகு அதில் சற்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் குறைகளை மக்கள் மத்தியில் சொல்லி எளிதாக ஆட்சியை பிடித்து விடலாம் என்று தி.மு.க. தலைவர்கள் நம்பி கொண்டிருந்தனர். தற்போது அதுமட்டுமே போதாது. கூடுதலாக பாடுபட வேண்டும் என்ற நெருக்கடியான நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது.

    அடுத்து ரஜினி தனித்து போட்டியிடுவாரா? அல்லது கூட்டணி அமைப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக எழுந்துள்ளது.

    அவர் தனித்து போட்டியிட்டால் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதில் கேள்விக்குறி உள்ளது. அவர் நடத்திய ரகசிய சர்வேயில் அதற்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்று கூறப்படுகிறது. எனவே ரஜினி கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அவரது கூட்டணியில் கமல்ஹாசன் கட்சியும் இணைந்தால் அவர்கள் இருவரும் சேர்ந்து சுமார் 20 சதவீத வாக்குகளை நிச்சயமாக பிரித்து விடுவார்கள். இது தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளையுமே நேரடியாக பாதிக்கும்.

    அப்படி இல்லாமல் ரஜினியை முன்னிறுத்தி பா.ஜனதா புதிய கூட்டணியை உருவாக்கினால் சில சிறிய கட்சிகள் அதில் சேர வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டணியும் சுமார் 10 முதல் 12 சதவீத வாக்குகளை பிரிக்க கூடும். எனவே ரஜினி அரசியலில் எந்த ரூபத்தில் வந்தாலும் ஏதோ ஒரு கட்சிக்கு பாதிப்பு இருக்க போவது நிச்சயம் என்பது உறுதியாகிவிட்டது.

    ரஜினியின் புதிய கட்சி மற்றும் கூட்டணி ஆகியவை மட்டுமின்றி ஒவ்வொரு தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர் பலம், பலவீனத்தை பொறுத்தும் வெற்றி, தோல்வி அமையும். தேர்தல் பிரசாரமும் முக்கிய பங்கு வகிக்கும்.

    எனவே ரஜினியின் அதிரடியால் ஆட்டம் காணப்போவது எந்த கட்சி என்பது பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தெள்ளத்தெளிவாக தெரிந்து விடும்.

    Next Story
    ×