search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    ராமேசுவரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக மின்சாரம் துண்டிப்பு

    ராமேசுவரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக மின்சாரமின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புரேவி புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக, சூறாவளி காற்று நீடித்தது. கடல் அலைகள் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டதால் பாம்பன் கடல் பகுதி மிகவும் ஆக்ரோ‌ஷமாக காணப்பட்டது.

    தனுஷ்கோடி உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடல் அலைகள் சீற்றமாக இருந்ததால் கடற்கரை யோரம் வசித்த மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 2 நாட்களாக பெய்த மழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன.

    இதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று முழுவதும் மின் இணைப்பு கொடுக்கப்படாததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    இன்று 3-வது நாளாக மின்சாரமின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் இன்றும் காற்று மற்றும் மழை நீடித்து வருகிறது.

    இதற்கிடையில் புரேவி புயல் வலுவிழந்த விட்டதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்று மாலை 5.30 மணி அளவில் வலுவிழந்த புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது.

    பாம்பனுக்கு தென் மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த தாழ்வு நிலை தொடர்ந்து மேற்கு தென் மேற்கு திசையில் நகர்ந்து ராமநாதபுரத்துக்கும் தூத்துக்குடிக்கும் இடையே இன்று இரவு அல்லது நாளை காலை கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது .

    காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால் பாம்பன் ரெயில் பாலத்தில் கடந்த 2 நாட்களாக ரெயில்கள் இயக்கப்படவில்லை.

    சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இயக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து ராமேசுவரம் வந்த ரெயில் ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    நள்ளிரவு 2.45 மணிக்கு ராமநாதபுரம் வந்த அந்த ரெயிலில் இருந்த பயணிகள் அங்கிருந்து ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    புயல் எச்சரிக்கை காரணமாக மதுரை விமான நிலையமும் பகல் 12 மணி வரை மூடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×