search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு கலை கல்லூரியில் முதுகலை இறுதியாண்டு மாணவிகள் தண்ணீர் குழாய்களில் கை கழுவும் காட்சி.
    X
    அரசு கலை கல்லூரியில் முதுகலை இறுதியாண்டு மாணவிகள் தண்ணீர் குழாய்களில் கை கழுவும் காட்சி.

    அரசு கல்லூரிகளில் முதுகலை இறுதியாண்டு வகுப்புகள் தொடக்கம்

    தர்மபுரி மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை இறுதியாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. இந்த வகுப்புகளுக்கு கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் வந்தனர்.
    தர்மபுரி:

    தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்புக்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனோ பரவல் கட்டுப்படுத்தபட்டதன் காரணமாக பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் தமிழக அரசின் உத்தரவுபடி நேற்று முதல் மீண்டும் தொடங்கின. எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். உள்ளிட்ட பல்வேறு முதுகலை படிப்பு பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு மாணவ-மாணவிகள், எம்.பில்., பி.எச்.டி. ஆகிய ஆராய்ச்சி படிப்புகளை படிப்பவர்கள் 8 மாதங்களுக்கு பிறகு நேற்று கல்லூரிகளுக்கு வந்தனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் அணிந்தபடி இருந்தனர்.

    தர்மபுரி அரசு கலைக்கல்லூரிக்கு நேற்று வந்த மாணவ-மாணவிகள் கல்லூரி வளாக நுழைவுவாயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களில் கைகளை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு கைகளை நன்றாக கழுவிய பின்பு கல்லூரி வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாணவ-மாணவிகளை அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், கொரோனா சிறப்பு நிலை அதிகாரி வேலவன், தேசிய மாணவர் படை கேப்டன் விஜயதேவன், உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர். மாவட்டத்தில் முதுகலை இறுதியாண்டு வகுப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்பு வகுப்புகள் நடைபெறும் அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×