search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    மதுரையில் ஒருங்கிணைந்த குடிநீர் விநியோகம் உள்பட புதிய திட்டங்கள்- முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

    மதுரையில் ஒருங்கிணைந்த குடிநீர் விநியோகத் திட்டம் உள்பட புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சேலத்திற்கு சென்றார். இன்று காலை 9.50 மணிக்கு சேலம் முகாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சேலம் சர்க்யூட் ஹவுசுக்கு செல்கிறார். அங்கு மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். அதன் பின்னர் சேலம் முகாம் அலுவலகத்துக்கு செல்கிறார்.

    பின்னர் மாலை 5.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக ஈரோடுக்குச் செல்கிறார். ஈரோடு முத்து மஹாலில் நடக்கும் விழாவில் மாலை 6.30 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

    அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக மதுரைக்கு செல்கிறார். மதுரையில் டி.வி.எஸ். விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார்.

    நாளை (4-ந் தேதி) காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடைகிறார்.

    அங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒருங்கிணைந்த குடிநீர் விநியோகத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, புதிய கலெக்டர் அலுவலக கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.

    பின்னர் அங்கிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு சாலை மார்க்கமாக சிவகங்கைக்குச் செல்கிறார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்.

    அங்கிருந்து புறப்பட்டு சிவகங்கை சர்க்யூட் ஹவுசுக்கு செல்கிறார். அங்கு ஓய்வெடுக்கும் அவர், மாலை 5.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வேலம்மாள் மருத்துவக் கல்லூரிக்கு சென்று அங்கு நடக்கும் விழாவில் பங்கேற்கிறார்.

    மாலை 6.30 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் அவர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8 மணியளவில் சென்னையை வந்தடைகிறார்.
    Next Story
    ×