search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் பொருட்களை போட்டு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
    X
    சாலையில் பொருட்களை போட்டு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

    களக்காடு அருகே பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியல்

    களக்காடு அருகே வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று திடீரென சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
    களக்காடு:

    களக்காடு அருகே தம்பிதோப்பில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணகுடி-சேரன்மாதேவி சாலையோரம் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். அந்த வீடுகளுக்கு களக்காடு பேரூராட்சியில் தீர்வை செலுத்தி வருகின்றனர். மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளதாகவும், தற்போது சாலை விரிவாக்கப்பணி நடைபெற உள்ளதால் வீடுகளை அகற்றும்படியும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தாமாகவே வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று இடம் வழங்க கோரியும் நேற்று பொதுமக்கள் தம்பிதோப்பு சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட வீட்டு உபயோக பொருட்களை சாலையில் குவித்து வைத்தனர்.

    போராட்டத்தில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் முருகன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் சுகுமார், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, காங்கிரஸ் பிரமுகர் கிருஷ்ணகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அங்கு போக்குவரத்து தடைபட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி தாசில்தார் (பொறுப்பு) பிரின்சி அருள்செல்வின், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனி, சேகர் மற்றும் போலீசார் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை வீடுகள் இடிப்பு நிறுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    மேலும் போராட்டத்தின்போது பொதுமக்கள் கூறுகையில், “டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற கட்டிடம், கலையரங்கம், உடற்பயிற்கூடம், காமராஜர் நினைவு மணிமண்டபம் மற்றும் கருவேலங்குளத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நூலக கட்டிடம் ஆகியவற்றையும் இடிக்கக்கூடாது. இதனையும் மீறி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் எங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்போம்“ என்றனர். இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×