search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    பரமத்தியில் அகல் விளக்கு தவறி விழுந்ததில் சாலை பணியாளர் உடல் கருகி பலி

    வீட்டில் ஏற்றி வைத்த அகல் விளக்கு கீழே தவறி விழுந்து போர்வையில் தீப்பற்றி பரவியதில் தூங்கிக்கொண்டிருந்த சாலை பணியாளர் உடல் கருகி பலியானார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி பாவடி தெருவை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 56). இவர் நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 மகள்களும், தீனதயாளன் (33) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழனியம்மாள் இறந்து விட்டார். இதனால் சிவபிரகாசம் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் சிவபிரகாசத்தின் மகனும், மருமகளும் உறவினர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை நலம் விசாரிக்க சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று இருந்தனர். பின்னர் அங்கிருந்து சிவபிரகாசத்தின் மகன் தீனதயாளன் மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அதே நேரத்தில் சிவபிரகாசத்தின் வீட்டில் கார்த்திகை தீப அகல் விளக்குகள் வீடுகளில் ஏற்றப்பட்டு இருந்தது. அதில் ஒரு அகல் விளக்கு வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கீழே சிவபிரகாசம் போர்வையில் படுத்து தூங்கினார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அகல் விளக்கு கீழே தவறி விழுந்து சிவபிரகாசம் படுத்திருந்த போர்வையில் தீப்பற்றி பரவியது.

    அசந்து தூங்கிய அவர் தீப்பரவியதை அறியாமல் தூங்கினார். பின்னர் சிறிது, சிறிதாக பரவிய தீ, போர்வை முழுவதும் பரவி அவருடைய உடல் முழுவதும் பற்றி எரிந்தது. இதனிடையே சிவபிரகாசத்தின் மகன் தீனதயாளன் வீட்டுக்கு வந்தார். அப்போது தந்தையின் உடலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளார். ஆனால் சிவபிரகாசம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தீனதயாளன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த பரமத்தி போலீசார் சிவபிரகாசத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×