search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    X
    புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    தூத்துக்குடி துறைமுகத்தில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    புயல் உருவாகி இருப்பதை குறிக்கவும், அது வலது புறமாக கடக்கும் என்பது குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று காலை 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    தூத்துக்குடி:

    வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி இன்று 4-வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார்4 ஆயிரத்து 300 நாட்டுப்படகுகள், 423 விசைப்படகுகளை சேர்ந்த சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் உள்ள மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வருகிறார்கள்.

    கடந்த நில நாட்களுக்கு முன்பு 72 படகுகளில் ஆழ்கடலில் இருந்தன. அவர்களுக்கும் புயல் குறித்து எச்சரிக்கைவிடுக்கப்பட்டு உடனடியாக கரை திரும்ப உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து 64 படகுகள் நேற்று கரை திரும்பின. மேலும் 8 படகுகளை சேர்ந்த சுமார் 100 மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர்.

    இதே போல் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, பஞ்சள், தோமையார்புரம் உள்பட நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர்களும் இன்று 4-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 2 ஆயிரம் நாட்டுப்படகுகளும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்தது.

    இந்நிலையில் புயல் உருவாகி இருப்பதை குறிக்கவும், அது வலது புறமாக கடக்கும் என்பது குறித்து எச்சரிக்கைவிடுக்கும் வகையில் துறைமுகத்தில் இன்று காலை 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    புரெவி புயல் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்புள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் அதிகன மழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் வரை ஆற்றங்கரை பகுதிகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட நிர்வாகங்கள் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சிதுறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    புயல் காரணமாக இன்று முதல் வருகிற 4-ந் தேதி வரை 3 நாட்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×