search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்நாத் கோவிந்த்
    X
    ராம்நாத் கோவிந்த்

    ஐகோர்ட்டு நீதிபதிகளாக மாவட்ட நீதிபதிகள் 10 பேர் நியமனம் - ஜனாதிபதி ஒப்புதல்

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக 10 மாவட்ட நீதிபதிகளை நியமனம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இவர்கள் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் மொத்த நீதிபதிகள் பணியிடம் 75 ஆகும். தற்போது 53 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. பணிமூப்பு அடிப்படையில், மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி வருபவர்கள் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்படுவர்.

    அதன்படி, மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றிவரும் சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், சத்திகுமார், முரளிசங்கர், மஞ்சுளா, தமிழ்ச்செல்வி ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் குழு சுப்ரீம் கோர்ட்டுக்கு பரிந்துரை செய்தது.

    இந்த பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டு, மாவட்ட நீதிபதிகள் 10 பேரையும் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்தது. அதேவேளையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்காக அந்த பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று ஜனாதிபதி ஒப்புதல் அளித்து அதற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டார்.

    அதையடுத்து, மாவட்ட நீதிபதிகள் 10 பேரும் விரைவில் ஐகோர்ட்டு நீதிபதிகளாக பொறுப்பேற்க உள்ளனர். இவர்கள் பதவியேற்றுக்கொள்ளும்போது, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயரும்.

    புதிதாக பொறுப்பேற்க உள்ள மாவட்ட நீதிபதிகள் 10 பேரில், முரளிசங்கர்-தமிழ்ச்செல்வி ஆகியோர் கணவன்-மனைவி ஆவர்.

    நீதித்துறை வரலாற்றில் கணவன்-மனைவி இருவரும் ஒரே நேரத்தில் ஐகோர்ட்டு நீதிபதிகளாக பொறுப்பேற்றுக்கொள்வது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×