search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காய்கறிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
    X
    கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காய்கறிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

    மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி காய்கறிகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி கோவையில் காய்கறிகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    மத்திய அரசு கொண்டு வந்து உள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கோவை மாவட்ட குழு தலைவர் சு.பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் வாழைத்தார், பூசனிக்காய், சுரைக்காய் உள்பட பல்வேறு காய்கறிகளை கையில் ஏந்தியபடி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். அத்துடன் டெல்லியில் விவசாயிகள் மீது நடத்திய தடியடியை கண்டித்து தங்கள் வாயில் கருப்பு துணியையும் கட்டி இருந்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இது குறித்து சு.பழனிசாமி கூறும்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்களால் வேளாண் நிலங்கள் மற்றும் வேளாண் உற்பத்தி முழுவதும் கார்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு சென்று விடும். இந்த மசோதாக்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளை அழைத்து பேச வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கை ஏற்று திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார்.
    Next Story
    ×