search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபோது எடுத்த படம்.
    X
    லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபோது எடுத்த படம்.

    போக்குவரத்து ஆணையரின் உத்தரவை ரத்து செய்யாவிட்டால் வேலைநிறுத்தம் - சம்மேளன செயலாளர் பேட்டி

    வேகக்கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஜி.பி.எஸ். கருவி விவகாரத்தில் போக்குவரத்து ஆணையரின் உத்தரவை ரத்து செய்யாவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி கூறினார்.
    நாமக்கல்:

    வேகக்கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஜி.பி.எஸ். கருவியை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் மட்டுமே வாங்கி பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் உத்தரவை ரத்து செய்யாவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி கூறினார்.

    தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் கடந்த 25-ந் தேதி சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்தது. இதில் லாரிகளுக்கு தகுதிச்சான்று புதுப்பிக்க வேகக்கட்டுப்பாடு கருவி, ஒளிரும் ஸ்டிக்கர், ஜி.பி.எஸ். கருவி போன்றவற்றை குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்ற போக்குவரத்துத்துறை ஆணையரின் புதிய உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 148 வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் 30-ந் தேதி மனு கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு கொடுத்தனர். நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கனரக வாகனங்களில் பொருத்தப்படும் வேகக்கட்டுப்பாட்டு கருவி, வாகனத்தின் இருப்பிடத்தை கண்டறிய உதவும் ஜி.பி.எஸ். கருவியை குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் உத்தரவை ரத்து செய்திட வேண்டும். ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஐகோர்ட்டு உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை கொடுத்து விட்டு வெளியே வந்த லாரி அதிபர்கள், சிறிது நேரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சம்மேளன செயலாளர் வாங்கிலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டு உள்ள போக்குவரத்து ஆணையரின் புதிய உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் மனு கொடுத்து உள்ளோம். அவ்வாறு ரத்து செய்யாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். இதில் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் நாமக்கல் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் அசோகன் மற்றும் நிர்வாகிகள் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கனரக வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல், ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை உடனடியாக அமல்படுத்துதல் மற்றும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களின் மட்டுமே வாங்க வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தபட்டன.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன துணைத்தலைவரும், பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான பி.பி.எஸ் ராஜூ என்ற ராமசாமி, உப தலைவர் சக்திவேல் மற்றும் இணை செயலாளர் வாசு ஆகியோர் பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரியிடம் நேற்று மனு கொடுத்தனர்.
    Next Story
    ×