search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    நாகர்கோவில்-மும்பை ரெயிலை தினசரி இயக்க வேண்டும்- பயணிகள் சங்கம் கோரிக்கை

    நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரம் தோறும் 4 நாட்கள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மும்பைக்கு செல்லும் போது தமிழக பகுதிகளில் பகல் நேரங்களில் பயணிக்கிறது. ஆனால் மறுமார்க்கமாக மும்பையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு பயணிக்கும் போது இரவு நேரத்தில் இயக்கப்படுகிறது. பயணிகள் மும்பையில் இருந்து இந்த ரெயில்களில் பயணிக்கும் போது இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மும்பையில் இருந்து நாகர்கோவில் மார்க்கமாக பயணிக்கும் இந்த ரெயிலின் கால அட்டவணையை தமிழக பகுதிகளில் பகல் நேரங்களில் பயணிக்குமாறு மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதன் பலனாக இந்த ரெயில் தென் மாவட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் பயணிக்கும்படி காலஅட்டவணை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, அதிகாலை விருதுநகர்-5.05, சாத்தூர்-5.30, கோவில்பட்டி-5.55, திருநெல்வேலி-8.20, நாங்குநேரி-9.07, வள்ளியூர்-9.17, நாகர்கோவில்-10.20 என்ற நேரத்தில் பயணிக்கிறது.

    இந்தநிலையில் மும்பை ரெயிலின் வழித்தடம் பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் செல்லாமல் திருப்பத்தூரில் இருந்து காட்பாடி, சித்தூர், பக்காலா, மடன்பாளி ரோடு, தர்மாவரம் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இனி இந்த ரெயில் குப்பம், பங்கார்பேட், கிருஷ்ணராஜபுரம், ஹிந்த்பூர் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு போகாமல் செல்வதால் தென் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்கு செல்ல பகல் நேர ரெயில் சேவை இல்லாமல் ஆகியுள்ளது.

    ஏற்கனவே தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு மிக குறைந்த அளவே ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரெயிலும் பெங்களூரு செல்லாமல் இயக்கப்படும் என்ற அறிவிப்பு பெங்களூரு வாழ் தமிழர்களை மிகவும் பாதிக்கும். எனவே இதற்கு மாற்று ஏற்பாடாக பெங்களூருவில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஜனசதாப்தி ரெயில் இயக்க வேண்டும்.

    தென் மாவட்டங்களில் இருந்து தமிழகம் வழியாக மும்பைக்கு தற்போது தினசரி ரெயில் சேவை இல்லாத குறை உள்ளது. எனவே நாகர்கோவில்-மும்பை (16339-16340) ரெயிலை தினசரி ரெயிலாக மாற்றம் செய்து சூப்பர் பாஸ்ட் ரெயிலாக இயக்க வேண்டும்.

    மேலும் மும்பை செல்லும் ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 20 மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இதை 10 மணி நேரமாக குறைத்தால் ரெயில் நிலையத்தில் இடநெருக்கடி வெகுவாக குறையும். எனவே இதுதொடர்பாக ரெயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×