search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுரை - புனலூர் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றம் : 4-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது

    மதுரையில் இருந்து புனலூர் செல்லும் பாசஞ்சர் ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக வருகிற 4-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
    மதுரை:

    கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. அதேபோல, பொதுப்போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு வந்து கொண்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தில் 60 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரெயில்சேவையை பொறுத்தமட்டில் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தென்னக ரெயில்வேயில் பிற மாநிலங்களுக்கான ரெயில் சேவை தொடந்தாலும், தமிழகத்திற்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் ரெயில் சேவை வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக கோவை செல்லவும், கரூர், ஈரோடு வழியாக கோவை செல்லவும் ரெயில்கள் இயக்கப்படவில்லை.

    இதுகுறித்து பயணிகள் தரப்பில் தொடந்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையே, செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் புனலூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூருக்கு (வ.எண்.06105) வருகிற 4-ந் தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 8 மணிக்கு திருச்செந்தூர் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு வருகிற 5-ந் தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்(வ.எண்.06106) திருச்செந்தூரில் இருந்து மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

    இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர்(கடலூர்), சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னையில் இருந்து வரும் ரெயில் பூதலூர் ரெயில் நிலையத்திலும், திருச்செந்தூரில் இருந்து செல்லும் ரெயில் சாத்தூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

    மதுரையில் இருந்து புனலூருக்கு தினமும் இரவு 11 மணிக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் தற்போது எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரெயில் வருகிற 4-ந் தேதி முதல் மதுரையில் இருந்து புனலூருக்கு சிறப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த ரெயில்(வ.எண்.06729, பழைய எண் 56700) மதுரையில் இருந்து வருகிற 4-ந் தேதி முதல் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.20 மணிக்கு புனலூர் சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் புனலூரில் இருந்து வருகிற 5-ந் தேதி முதல் மாலை 5.20 மணிக்கு புறப்படும். இந்த ரெயில்(வ.எண்.06730, பழைய எண் 56701) மறுநாள் காலை 6.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். இந்த ரெயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை, நாகர்கோவில், இரணியல், குழித்துறை, பாறசாலை, நெய்யாற்றின்கரை, திருவனந்தபுரம் சென்டிரல், திருவனந்தபுரம் பேட்டை, கொச்சுவேலி, கழக்குட்டம், கணியபுரம், முருக்கம்புழா, சிரயங்கில், வர்க்கலா, எடவை, பரவூர், மையநாடு, கொல்லம், கிளிக்கொல்லூர், குந்த்ரா, எழுகோன், கொட்டாரக்கரா, அவனீசுவரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மதுரையில் இருந்து செல்லும் ரெயில் வள்ளியூர் ரெயில் நிலையத்திலும், புனலூரில் இருந்து வரும் ரெயில் தனுவச்சபுரம் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும். இந்த ரெயிலில் ஒரு 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி பெட்டிகள், 2 கார்டு மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    இதற்கிடையே, தூத்துக்குடியில் இருந்து மைசூர் வரை தற்போது விழாக்கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ஆனால், இந்த ரெயில் இன்று(செவ்வாய்க்கிழமை) மட்டும் விழாக்கால ரெயிலாக இயக்கப்படும். இந்த ரெயில்(வ.எண்.06235) நாளை(புதன்கிழமை) முதல் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி வரை சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு (வ.எண்.06236) சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.
    Next Story
    ×