search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    திருப்பூரில் செல்போன் பறித்து ஓடிய கொள்ளையன் குத்திக்கொலை- வடமாநில தொழிலாளி வெறிச்செயல்

    திருப்பூரில் செல்போன் பறித்து ஓடிய கொள்ளையன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர்:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நள்ளிரவு தனியாக செல்லும் நபர்களை மிரட்டி பணம் பறிப்பது, செல்போன்கள் பறிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பீளமேடு பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்ற விக்னேஷ் என்ற வாலிபரை வழிப்பறி கொள்ளையர்கள் தடுத்தனர். விக்னேசின் செல்போனை அவர்கள் பறிக்க முயன்றனர். ஆனால் விக்னேஷ் செல்போனை கொடுக்க மறுத்தார். இதனால் வழிப்பறி கொள்ளையர்கள் விக்னேசை குத்திக் கொன்று விட்டு தப்பிச் சென்று விட்டனர். கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருப்பூரில் நேற்று நள்ளிரவு கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த வழிப்பறி கொள்ளையனே கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தினேஷ்குமார், சத்ரி. இவர்கள் 2 பேரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று நள்ளிரவு பணி முடிந்து அவர்கள் 2 பேரும் தாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    செல்லம்பாளையம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்று கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் அங்கு திடீரென வந்தார். அவர் கையில் கத்தி வைத்திருந்தார். உங்களிடம் உள்ள பொருட்களை கொடுங்கள், இல்லாவிட்டால் கத்தியால் குத்திவிடுவேன் என 2 பேரையும் அவர் மிரட்டினார். பின்னர் தினேஷ்குமாரிடம் இருந்த செல்போனையும், ரூ.2 ஆயிரம் பணத்தையும் அந்த நபர் பறித்து விட்டு ஓடினார்.

    செல்போனை பறி கொடுத்த தினேஷ்குமாரும், அவரது நண்பர் சத்ரியும் கொள்ளையனை துரத்திக் கொண்டு ஓடினர். செல்லம்பாளையம் மார்க்கெட் அருகே கொள்ளையனை 2 பேரும் மடக்கினர். அப்போதும் கொள்ளையன் அவர்களை எதிர்த்து நின்று கத்தியால் குத்த முயன்றான். ஆனால் 2 பேரும் சேர்ந்து பிடித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், கொள்ளையன் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவனையே குத்தினார். இதில் கொள்ளையனின் முதுகில் கத்திக்குத்து பலமாக விழுந்தது.

    பின்னர் தினேஷ்குமாரும், அவரது நண்பரும் தங்களிடம் பறித்த செல்போன், பணத்தை கொள்ளையனிடம் இருந்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இரவு நேரம் என்பதால் கொள்ளையன் கத்திக்குத்து காயங்களுடன் நீண்டநேரம் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தான்.

    நீண்ட நேரத்துக்கு பிறகு அந்த வழியாகச் சென்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் கொள்ளையன் உயிருக்கு போராடுவதை கண்டார். உடனடியாக அவர் திருப்பூர் தெற்கு பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து கொள்ளையனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொள்ளையன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள தெரிவித்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்டவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 33) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்து சமையல் வேலை, கட்டிட வேலைகளுக்கு சென்று வந்தார். பிறகு திருட்டு, கஞ்சா விற்பனை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டார். அவர் மீது திருப்பூர் மாவட்ட போலீஸ் நிலையங்களில் 3 திருட்டு வழக்கும், 3 கஞ்சா வழக்கும் உள்ளன.

    சீனிவாசனை கொலை செய்தவர் பற்றி விசாரித்தபோது உத்தரபிரதேசத்தை சேர்ந்த பனியன் கம்பெனி ஊழியர் தினேஷ்குமார் என்பது தெரியவந்தது. அவரையும், அவருடன் சென்ற நண்பர் சத்ரியையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவம் திருப்பூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×