
கோவை அருகே விளாங்குறிச்சி ரோடு காந்தி மாநகரில் நேற்று இரவு சரவணம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமானநிலையில் வந்த சரக்கு வேன் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு நடேசன் கோவில் வீதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (வயது 37), கோவை உடையாம்பாளையம் அஞ்சுகம் நகரை சேர்ந்த மணிகண்டன் (27), விழுப்புரம் மாவட்டம் கொமோர்பாளையம் பெரியபாளையத்து அம்மன்கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (23), கணபதி லட்சுமி புரத்தை சேர்ந்த அனந்தநாராயணன் (51), நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரத்தை சேர்ந்த மற்றொரு மணிகண்டன் (22), தூத்துக்குடி முத்துமாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்த முருகன் (32) என்பதும், அவர்கள் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 30 மூட்டைகளில் இருந்த ரூ.10 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான 2 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் எங்கிருந்து குட்காவை கடத்தி வந்தார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.